×

ஊராட்சிகளில் இணைய சேவை வசதி இல்லாத கிராம சேவை மையங்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும்: ஆர்வமுடன் காத்திருக்கும் பொதுமக்கள்

திருச்சுழி: விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்டு இணையசேவை இல்லாததால் பூட்டப்பட்ட நிலையிலிருக்கும் கிராம சேவை மைய கட்டிடங்களை விரைவாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராம மக்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தற்போதைய திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதை எளிதாக்க மின்ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் வருவாய்த் துறையினரின் சான்றிதழ்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது, போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை மீண்டும் பெறுவது, கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற சேவைகள் எளிதில் கிடைத்து வருகின்றன. இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பொதுச் சேவை மையங்கள் முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் மட்டும் செயல்பட்டு வந்தன. இதனால் பெரும்பாலான கிராம மக்கள் நகரத்துக்கு வர வேண்டிய சூழல் நிலவியது. பின்னர் பொதுச் சேவை மையங்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன.

இதனால் கிராம மக்கள் நகரத்துக்கு வந்து சான்றிதழ்களைப் பெறுவதற்கு காத்துக்கிடந்த நிலை மாறியுள்ளது. இதை மேலும் எளிதாக்கும் வகையில் மக்கள் தங்களுக்குத் தேவையான சான்றுகளைப் பொதுச் சேவை மையங்களிலேயே பெற முடியும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. சான்றிதழ்கள் பெறுவதை எளிமையாக்கிய இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில், இத்திட்டங்களை மேலும் எளிமையாக்க, கிராமங்கள் தோறும் கிராமச் சேவை மையங்களை அமைக்க அரசு முடிவு செய்து இதற்காக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் கிராம சேவை மையங்களுக்கான கட்டிடங்கள் உரிய அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்டன.  இதன்படி மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், கிராம சேவை மைய கட்டிடங்கள் கட்டும் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. முதல் கட்டமாக ரூ.13.12 லட்சம், இரண்டாம் கட்டமாக ரூ.14.43 லட்சம், அடுத்தகட்டமாக ரூ.17 லட்சம் என மூன்று கட்டங்களாக கிராம சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன. மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்கள் மூலம் இந்த சேவை மையங்களைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டது.

ஆனால், கட்டிடங்கள் கட்டப்பட்டு கணினிகள் இருந்தும், அவற்றுக்கான இணைய வசதி இல்லாததால், ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் இவை இன்னும் பல இடங்களில் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள் பயன்பாடு இல்லாமல் பூட்டப்பட்டுக்கிடக்கின்றன. சில இடங்களில் இந்த மைய கட்டிடங்கள் தற்காலிக ஊராட்சி மன்ற அலுவலகங்களாகவும், சில இடங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஓய்வு எடுக்கும் இடங்களாகவும் மாறியுள்ளன. இதன் காரணமாக அரசின் சேவைகளைப் பொதுமக்கள் விரைவாகப் பெறுவதில் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் கவனம் செலுத்தி கிராம சேவை மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜோயல் கூறுகையில், ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், இந்த கட்டிடங்கள் பலவும் முட்புதர்கள் மண்டி பாழடைந்து கிடக்கின்றன. சில இடங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இவை மாறியுள்ளன. திறக்கப்பட்ட கட்டிடங்களிலும், மகளிர் சுய உதவிகுழுக்களைச் சேர்ந்தவர்கள், எப்போதாவது கூட்டம் நடத்த மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

 சில இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும், அங்கன்வாடி மையங்களாவும் செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் கட்டிட பணிகள முடிந்த பின்பு இணைய வசதி சேவைகளை முறையாக செய்து தராததால், இந்த மையங்கள் எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல், அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் கூறுகையில், திருச்சுழி பகுதி மிகவும் பின்தங்கியதாக உள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெற இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டிய நிலையில், பல ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடங்கள் யாருக்கும் பயனளிக்காமல் பூட்டியே கிடக்கின்றன.

இதனால் மக்கள் ம.ரெட்டியபட்டி, அருப்புக்கோட்டை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எண்ணற்ற படித்த இளைஞர்கள் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தால் வேலைவாய்ப்பு உருவாவதுடன், மக்களுக்கான சேவையும் எளிதில் கிடைக்கும். எனவே, கட்டிடம் பாழடைந்து வீணாகாமல் இருக்கவும், மக்கள் தங்களுக்கான நலத்திட்டங்களை எளிதில் பெறவும் கிராம சேவை மையங்களை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

Tags : Gram ,Seva Kendras , Internet service in panchayats, village service centers, and the eagerly waiting public
× RELATED சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது!