×

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற பேரணியில் தள்ளுமுள்ளு: 8 பேர் பலி; 2 பேர் கவலைக்கிடம்

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற பேரணியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக இது என்ன வினை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்துவருகிறார்.

நெல்லூர் மாவட்டம் கந்துகூரில் சந்திரபாபு நாயுடு வாகனத்தில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் மாவட்டம் முழுவதில் இருந்து ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். ஆர்வமிகுதியில் தொண்டர்கள் சந்திரபாபு நாயுடு இருந்த வாகனத்தின் அருகில் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு உடனடியாக கூட்டத்தை முடித்துவிட்டு காயமடைந்தவர்களை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தலா 10 லட்சம் நிதிஉதவி அளிக்கப்படும் என்றும், அவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகள் ஏற்கப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார்.


Tags : chief minister ,chandrabababu ,andhra , Andhra Pradesh, former Chief Minister Chandrababu Naidu, push and pull in the rally, 8 people died
× RELATED வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில்...