×

வணிக பயன்பாட்டுக்காக அம்மா குடிநீர் ஆலைகளை முறைகேடாக பயன்படுத்துகின்றனர்: கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் குற்றச்சாட்டு

சென்னை: அம்மா குடிநீர் ஆலைகளை வணிக பயன்பாட்டுக்காக முறைகேடாக பயன்படுத்துகின்றனர் என கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் குற்றம் சாட்டினார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன்  மாளிகையில் உள்ள கூட்டரங்கில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நேற்று நடந்தது.   கூட்டம் தொடங்கியம், மேயர் பிரியா விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி  ஸ்டாலினை நியமனம் செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து,  புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி  ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதிலளித்தார்.  கூட்டத்தில், கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகர் (வார்டு 137 திமுக) பேசியதாவது: ஏழை மக்களுக்கு தினசரி 20 லிட்டர்  குடிநீர் வழங்க வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் அம்மா  குடிநீர் ஆலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் அதன் நோக்கம் மாறி, ஏழை மக்களுக்கு  பதிலாக அம்மா குடிநீர் ஆலைகளில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு வணிகர்கள்  அதனை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். சென்னை முழுவதும் ஒரே  ஒப்பந்ததாரர் கடந்த 10 ஆண்டுகளாக ஆலைகளை பராமரித்து வருவதும்,  மாநகராட்சி சார்பில் முறையாக ஆலைகளை கண்கானிக்காமல் உள்ளதும் இதற்கு  காரணமாக உள்ளது.

 மேலும், பொதுமக்களிடம் பயன்பாடு குறைவாக உள்ள அம்மா  குடிநீர் ஆலைகளை குடிசைப் பகுதிகளுக்கு அருகில் இடமாற்றம் செய்ய வேண்டும்  அல்லது மூடிவிட வேண்டும். ஆலைகளை பராமரிக்க புது ஆன்லைன் டெண்டர் விடப்பட  வேண்டும், பராமரிப்பு மற்றும் கண்காணிப்பை முறைப்படுத்த வேண்டும். மேயர் பிரியா:  சென்னை முழுவதும்  தற்போது 52 அம்மா குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆண்டு ஒன்றுக்கு  இதற்கு ஆகும் செலவு மிக குறைவே. வரும் காலங்களில் அம்மா குடிநீர் ஆலைகளால்  கூடுதல் செலவு ஏற்பட்டால் நடைமுறைகளை மாற்றலாம். பராமரிப்பு மற்றும்  கண்காணிப்பை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019 பிரிவு படி குடியிருப்பு, வணிகம், தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைக்கான மனைப்பிரிவு 10,000 சதுரடிக்கு மேல் உள்ளபோது, அதில் 10 சதவீதம் நிலத்தினை திறந்த வெளி நிலமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் திறந்த வெளி நிலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாமலும் சம்பந்தப்பட்ட நிறுவனமே ஆக்கிரமித்துள்ள சூழலும் உள்ளது. உதாரணமாக, தனியார் மருத்துவமனைகளின் ஓஎஸ்ஆர் நிலங்கள் வாகனங்கள் நிறுத்தும் இடமாக, சுற்றுச்சுவர் அமைத்து மருத்துவமனைகளே ஆக்கிரமித்து உள்ளன. சென்னை முழுவதும் ஓஎஸ்ஆர் நிலங்கள் மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து மூன்று மாதங்களுக்குள் மாமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.  இதற்கு தனிக் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


Tags : Tanasekaran , Amma misuses drinking water plants for commercial use: Accounts Standing Committee Chairman Dhanasekaran alleges
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதி எண்ணூர்...