×

அனகாபுத்தூரில் புழுதி பறக்கும் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

பல்லாவரம்: அனகாபுத்தூரில் புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல்லாவரத்தில் இருந்து பம்மல் வழியாக திருநீர்மலை, திருமுடிவாக்கம் சிப்காட் மற்றும் பழந்தண்டலம் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு வாகன ஓட்டிகள் அனகாபுத்தூர், காமராஜபுரம் சாலையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பிரதான சாலை வழியாக சென்றால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல காலதாமதம் ஏற்படும். அத்துடன் எரிபொருளும் வீண் விரயம் ஆகும் என்பதால், விவரம் தெரிந்தவர்கள் அதிகமாக அனகாபுத்தூர், காமராஜபுரம் சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபகாலமாக இந்த சாலை கடுமையாக சேதமடைந்து, ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பயணிக்க முடியாத நிலையில் மண் சாலை போன்று காட்சி அளிக்கிறது. இதனால், சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், சேதமடைந்த சாலையில் கனரக வாகனங்கள் பயணிக்கும் போது, அதிகப்படியான புழுதி பறந்து, அந்த பகுதி எங்கும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதுபோன்ற, சம்பவங்களில் கனரக வாகனத்திற்கு பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை தூசு பதம் பார்ப்பதால், அவர்கள் கண்ணெரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற பிரச்னைக்கு ஆளாக நேரிடுகிறது.

மேலும், இந்த சாலையில் அமைந்துள்ள உணவகம் மற்றும் மளிகைக் கடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் மீது பறந்து வரும் மண் மற்றும் தூசுகள் படிகின்றன. இதனால் அவற்றை மக்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்ய முடியாமல், பெரும் இழப்புகளை சந்தித்து வருவதாக பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். எனவே அனகாபுத்தூர், காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சேதமடைந்து காணப்படும் பிரதான சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags : Anagaputhur , Dusty road in Anagaputhur: Motorists suffer
× RELATED பெருங்களத்தூர் வணிக வளாகத்தில் உள்ள 27...