யுனைட்டட் கோப்பை டென்னிஸ் ஆஸ்திரேலியாவில் இன்று தொடக்கம்: 18 அணிகள் பங்கேற்பு

பிரிஸ்பேன்: டென்னிஸ் வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் ‘யுனைட்டட் கோப்பை’ டென்னிஸ் போட்டித் தொடர், ஆஸி.யில்  இன்று தொடங்குகிறது.ஏற்கனவே மகளிருக்கான டபுள்யுடிஏ மற்றும் ஆண்களுக்கான ஏடிபி டென்னிஸ் தொடர்கள், ஒரே போட்டியில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தொடர், கிராண்ட் ஸ்லாம் போட்டிகள், ஆண்டு இறுதி பைனல்ஸ் தொடர்கள் நடந்து வரும் நிலையில், சமீபத்தில் முதல் முறையாக உலக டென்னிஸ் லீக் போட்டி துபாயில் நடந்தது.  அதில்  நோவாக் ஜோகோவிச், இகா ஸ்வியாடெக்  உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் குழு ஆட்டங்களில்  பங்கேற்றனர்.

இந்நிலையில், ரூ.125 கோடி பரிசுத் தொகை கொண்ட  யுனைட்டட் கோப்பை டென்னிஸ் அறிமுக தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. இதில் 18 நாடுகள்  6 பிரிவுகளாக களமிறங்குகின்றன. உலகின் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலாந்து),  ரபேல் நடால், பவுலா படோசா (ஸ்பெயின்), சிட்சிபாஸ், மரியா சாக்கரி (கிரீஸ்),  ஸ்டேன் வாவ்ரிங்கா, பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து),  ஹடாட் மய்யா (பிரேசில்), டெய்லர் ஃபிரிட்ஸ், மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பெத்ரா குவித்தோவா, அய்லா டாம்ஜனோவிச், நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா)  உள்பட சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஏடிபி, டபுள்யூடிஏ இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. ஒற்றையர், இரட்டையர், கலப்பு  இரட்டையர் என குழு ஆட்டங்களாக போட்டிகள் நடத்தப்படும். ஜன.9ம் தேதி  இறுதி ஆட்டங்கள் நடக்கும். பிரிஸ்பேன், பெர்த், சிட்னி நகரங்களில் போட்டிகள் நடைபெறும். இன்று நடைபெறும் முதல் குழு போட்டியில் இத்தாலி - பிரேசில்  அணிகள் மோத உள்ளன.

Related Stories: