சென்னை: சமச்சீர் கல்வியை செதுக்கி தந்து சிறப்பாக வர பேராசிரியரே காரணம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மண்ணடி தம்பு செட்டி தெருவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். ‘மொழிப்போர் களம்கண்ட தமிழ் வீரம்’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று பேசியதாவது: சமச்சீர் கல்வியை உருவாக்கிய பெருமை கலைஞருக்கு உண்டு என்று சொன்னால், அதற்கு கருவியாக இருந்த பெருமை எனக்கு உண்டு.
சமச்சீர் கல்வியின் உருவம் எப்படி இருக்க வேண்டும். அது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றும் உறுதி செய்தவர் பேராசிரியர்தான். அன்றைக்கு எத்தனையோ மாலை நேரங்களில் இரவு நேரங்களில் பேராசிரியரிடம் பேசி இருக்கிறேன். அன்றைக்கு 10ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் வந்தன என்று சொன்னால், ஒவ்வொரு புத்தகங்களிலும் இருக்கக்கூடிய அனைத்து வரிகளையும் முழுமையாக படித்தவர் நான் கூட இல்லை. பேராசிரியர்தான். அந்த அளவுக்கு சமச்சீர் கல்வியை செதுக்கித் தந்து அது சிறப்பாக வர முனைப்பு காட்டியவர் பேராசிரியர். பேராசிரியர் கொடுத்த வாக்கின்படி, சட்டப்போராட்டம் நடத்தி சிறப்பான முறையில் சமச்சீர் கல்வியை செயல்பாட்டுக்கு கொண்டுவர செய்தவர் நம்முடைய இன்றைய முதலமைச்சர்.இவ்வாறு அவர் பேசினார்.
