உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி மூன்றாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

 திருப்பூர்: உடுமலை திருமூர்த்தி அணையின் மூலம் பிஏபி பாசன திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களிலுள்ள சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுவதுடன், உடுமலை நகராட்சி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஆக., 26 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு சுற்றுகள் நீர் வழங்கப்பட்டு டிச.,20 ம் தேதி பாசன காலம் நிறைவு பெற்றது.

இதனையடுத்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு , தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திருப்பூர் , கோவை மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் இன்று முதல் 120 நாட்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில், நான்கு சுற்றுகளாக 7 ஆயிரத்து 600 மில்லியன் கன அடி திறக்க தமிழக அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், மூன்றாம் மண்டல பாசனத்திற்கு,

மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் நடைபெற்ற தண்ணீர் திறப்பு விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்  கயல்விழி செல்வராஜ் பங்கேற்று தண்ணீரை திறந்து வைத்தார்.

விழாவில், கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன்,  கோட்ட செயற் பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன்,  உதவி பொறியாளர் மாரிமுத்து உள்ளிட்ட  விவசாயிகள் பங்கேற்றனர்.

திருமூர்த்தி அணையில் , மொத்தமுள்ள 60 அடியில் , தற்போது 49.44 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 148 கன அடியாக உள்ளது.

Related Stories: