×

கெத்தை மின் நிலையத்தில் யானையால் சிறைபிடிக்கப்பட்ட 4 போலீசார் பத்திரமாக மீட்பு: பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர்

மஞ்சூர்: கெத்தை மின் நிலையத்தில் யானையால் சிறைபிடிக்கப்பட்ட 4 போலீசார் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டியடித்த பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை மின்நிலையம். குந்தா அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக ராட்சத குழாய்கள் மூலம் இங்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு இங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்காக, பென்ஸ்டாக் பகுதியில் சர்ஜ்சாப்ட் (காற்று போக்கி) அமைக்கப்பட்டுள்ளது. குழாய் பராமரிப்பு மற்றும் பணிகளுக்கு செல்லும் ஊழியர்களின் பயன்பாட்டிற்கு வின்ச் உள்ளது. வெளியாட்கள் நடமாட்டத்திற்கு தடை செய்யப்பட்ட இப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள மின்வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 4 போலீஸ்காரர்கள் கட்டிடத்திற்குள் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் வெளியில் சத்தம் கேட்டதை தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது, வெளியே இரண்டு குட்டிகளுடன் 2 காட்டு யானைகள் நிற்பதை பார்த்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர்கள், மின் விளக்குகளை அனைத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் மஞ்சூர் பகுதியில் இரவு ரோந்தில் ஈடுபட்ட எஸ்ஐ சசிகுமார் தலைமையிலான போலீசார் வனத்துறையை சேர்ந்த துரை என்பவருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கட்டிடத்தை சுற்றி நின்றிருந்த காட்டு யானைகளை பட்டாசு வெடித்து விரட்டினர். வெடி சத்தம் கேட்டதும் காட்டு யானைகள் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றது. இதை தொடந்து அங்கு சிக்கியிருந்த 4 போலீஸ்காரர்களும் அதிகாலை மீட்கப்பட்டு மஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.



Tags : Kethai , 4 policemen who were captured by an elephant in Kethai power station were rescued safely: they chased them away by bursting firecrackers
× RELATED வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு