×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 23 அணி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய முடிவு

சென்னை: திமுகவில் உள்ள 23 அணிகளில் உள்ள புதிய நிர்வாகிகள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக தேசிய மற்றும் மாநில கட்சிகள் இப்போது இருந்தே தேர்தல் பணிகளை தொடங்கி வருகின்றன. குறிப்பாக தலைவர்கள் அடிக்கடி ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளன.

குறிப்பாக, மாவட்டம் மற்றும் பூத் வாரியாக கட்சியை பலப்படுத்துவது குறித்தும், இளம் தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் சமூக வலைதளங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்தும் அந்தந்த கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வைத்து திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், குழுக்களின் கூட்டம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளருமான தயாநிதி மாறன், துணை பொதுச்செயலாளர்கள் மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திமுகவில் இளம்வயதினர் முதல் ஒவ்வொரு தொழில் செய்பவர்களை ஈர்க்கும் வகையில் அணிகள் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திமுகவில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, அயலக அணி, சுற்றுச்சூழல் அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, பொறியாளர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணிகள் என மொத்தம் 23 அணிகள் உள்ளன.

மேலும் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, ஆதிதிராவிடர் நல உரிமை பிரிவு, அமைப்பு சாரா ஓட்டுநர் நல பிரிவு, சொத்து பாதுகாப்பு குழு, தணிக்கை குழு, என 23 சார்பு அணிகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து அணிகளுக்கும் மாநில அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அனைவரும் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிலையில் தான் இந்த அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் என மொத்தம் 416 பேர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும், திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டமும் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலில் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் எவ்வாறு தயாராவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மேற்கொள்வது குறித்தும், அரசின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

அப்போது, அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் மத்தியில் நாடாளுமன்ற தேர்தலை திமுகவினர் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாவட்ட அளவில் திமுக அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி விரைந்து முடிக்க வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில் அணிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும், 2024 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற அது அடித்தளமாக அமையும் .

அதிமுக, பாஜகவினரின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் நமது பிரசாரம் அமைய வேண்டும். அதிமுக எந்த வகையில் கூட்டணி அமைத்தாலும் மக்களிடம் அது எடுபடாது. அவர்களின் திட்டங்களை முறியடிக்கும் வகையில் நமது ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க நீங்கள் பாடுபட வேண்டும்.

இதுவரை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வந்ததை போல் 2024 பாராளுமன்ற தேர்தலிலும் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெற நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும். அதற்கேற்ப உங்கள் செயல்பாடு அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Chennai ,Anna Anna Annawalayam ,G.K. Stalin , M.K.Stal's consultation with 23 team executives at Anna University, Chennai: Important decision on parliamentary elections
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...