×

வீட்டு வசதி வாரியத்தில் கட்டப்பட்ட 8 ஆயிரம் வீடுகளை விற்க புதிய திட்டம்-அமைச்சர் முத்துசாமி தகவல்

கோவை : தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தில் கட்டிய 8 ஆயிரம் வீடுகள் விற்கப்படாத நிலையில் இருப்பதாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.  கோவை சிங்காநல்லூரில் வீட்டு வசதி வாரிய சுய நிதி குடியிருப்பு திட்டத்தில் பழுதடைந்த 960 வீடுகளை இடித்து மறு கட்டமைப்பு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே நடந்த இந்த கூட்டத்தில் தமிழக வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துச்சாமி, தமிழக மின் வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக், முன்னாள் எம்.பி நாகராஜன், மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, கவுன்சிலர் சிங்கை சிவா, ஜெயராமன், முருகானந்தம், முத்துக்குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், அமைச்சர் முத்துச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது: சிங்காநல்லூர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன் வீட்டு வசதி வாரியத்தால் கட்டிய வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் 10 ஆண்டுகளாக இருக்கிறது. இங்கே உள்ள 960 வீடுகளை மறு கட்டுமானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அது எதிர்பார்த்த அளவில் நடக்கவில்லை. காரணம் வீட்டு வசதி வாரியம் அதை செய்யாமல் அப்போது விட்டு விட்டது.

தமிழக முதல்வர் பொறுப்பேற்ற உடன், இங்கே வீடுகள் கட்டி தர ஏற்பாடு செய்து உத்தரவிட்டார். இங்கே வசிக்கும் உரிமையாளர்களுக்கு எந்த செலவும் இருக்க கூடாது என்பது முதல்வரின் எண்ணமாக இருந்தது. குடியிருப்பு சங்கங்கள், கட்டுமான நிறுவனங்கள் இணைந்து அவர்களுக்குள்ளாகவே முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மிக தரமாக வீடுகள் கட்டி தர வேண்டும் என கட்டுமான நிறுவனத்திற்கு சொல்லியிருக்கிறோம். வீடுகளுக்கு பாதுகாப்பு மிக முக்கியம். இங்கே அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கட்டுமான நிறுவனம், குடியிருப்பு சங்கத்திற்கு பராமரிப்பு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 5 கோடி ரூபாய் டெபாசிட் தொகை கிடைக்கும். இப்போது 12 இடங்களில் இதுபோன்ற கோரிக்கை வந்து அங்கே பணிகள் நடக்கிறது.

 4 இடங்களில் வேலை துவங்கும் நிலையில் இருக்கிறது. மற்ற இடங்களில் 3 மாத காலத்தில் பணிகள் துவங்கி விடும். கோவையில் இது சிறப்பாக மாடலாக  வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 30 மாத காலத்தில் பணி முடிக்க அவகாசம் இருக்கிறது. ஆனால் 24 மாதங்களில் பணி முடியும் என தெரிவித்திருக்கிறார்கள். மதிப்பீடு விவரங்கள் நாங்கள் கேட்கவில்லை. எவ்வளவு பரப்பளவு, ஏற்கனவே இருந்ததை விட கூடுதலாக வீட்டு உரிமையாளர்களுக்கு வீடு கிடைக்கும். இதில் எங்களுக்கும், குடியிருப்பு சங்கத்தினருக்கும் திருப்தி இருக்கிறது.

இதில் பலன் என்றால் மொத்தமாக கட்டும் கட்டடத்தில் இருந்தே அவர்கள் ஈடுகட்டி கொள்ள வேண்டும். வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு வசதி, முத்திரை தாள் போன்றவற்றையும் கட்டுமான நிறுவனமே செய்து தரும். உரிமையாளர்கள் எந்த தொகையும் தர வேண்டியதில்லை. வீட்டு வசதி வாரியத்தில் கட்டிய 8 ஆயிரம் வீடுகள் கடந்த 3 ஆண்டுகளில் விற்கப்படாமல் இருக்கிறது. அதை விற்க புதிய திட்டம் உருவாக்கி தந்திருக்கிறோம்.

மீதமுள்ள வீடுகளை வாடகை குடியிருப்பாக மாற்றி விடலாம் என ஏற்பாடு செய்திருக்கிறோம். எந்த இடத்தில் புதிய திட்டம் ஆரம்பிக்கும் முன்பே அங்கே என்ன தேவை இருக்கிறது என ெதரிந்து கொண்டு அதற்கு பின் திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது கூட்டு திட்டம் மூலமாக வீடுகள் கட்டப்படுகிறது. 100 வீடுகள் கட்டினால் நமக்கு 50 வீடுகள் வந்து விடும். மீதமுள்ள வீடுகளை அவர்கள் விற்று விடுவார்கள். இதனால் அவர்கள் தரத்துடன் தான் கட்டுவார்கள்.

எது பாதுகாப்பாக இருக்குமோ அந்த திட்டத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்களுக்கு எங்கே வீடு கட்டினால் பயனுள்ளதாக இருக்குமோ அங்கே தான் வீடுகள் கட்டப்படுகிறது. இப்போது மூன்றில் இரு பங்கு மெஜாரிட்டி இருந்தால் அங்கே கட்டடம் கட்ட, பராமரிப்பு பணி நடத்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் 50 சதவீதம் பேர் சம்மதம் இருந்தால் வீடு கட்டும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. சிங்காநல்லூர் பகுதியில் வீடுகள் கூடும், மாடிகள் அதிகமாகும். 960 வீடுகள் ஒரு வளாகத்தில் வந்து விடும். இது தொடர்பாக சங்கத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமைச்சர் முத்துச்சாமி கூட்டத்தில் பேசுகையில், ‘‘ இங்கே பல்வேறு தரப்பினர் கருத்துக்கள் தெரிவித்தனர். குடியிருப்பு சங்கத்தினர் மூலமாக கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். கட்டுமான நிறுவனம் 80 ஆண்டு காலத்திற்கான தரத்தை உறுதி செய்ய வேண்டும். லிப்ட், தீயணைப்பு வசதி என பல்வேறு அம்சங்களுடன் கட்டடம் கட்டி தரப்படும். சிங்காநல்லூரில் 60 அடி ரோடு அமைந்து விட்டது. பயனாளிகளுக்கு அதிக சதுரடி பரப்பில் வீடுகள் கிடைக்கும். சவுரிபாளையம் வீட்டு வசதி பகுதியிலும் இதுபோல் செய்யப்படும், ’’ என்றார்.

இதில் தமிழக மின் வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ‘‘  விரைவில் இங்கே 960 வீடுகள் கட்டி உரியவர்களுக்கு ஒப்படைக்கப்படும். தமிழக முதல்வர் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். இது மக்களுக்கான அரசு, கடந்த ஆட்சிகாலத்தில் 5 ஆண்டுகள் எதுவும் செய்யவில்லை. இப்போது 211 கோடி ரூபாய் செலவில் ரோடு போடும் பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது. கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்’’ என்றார்.

Tags : Muthusamy ,Housing Facility Board , Coimbatore: Minister Muthuchami said that 8,000 houses built by the Housing Board in Tamil Nadu are unsold. Coimbatore
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே...