×

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான கனமழை வயல்களில் தண்ணீர் தேங்குவதால் நெல் அறுவடை பாதிக்கும் ஆபத்து-விவசாயிகள் கவலை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், பரவலான மழை தொடர்வதால், நீர்நிலைகள் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன. வயலில் தண்ணீர் தேங்குவதால் நெல் அறுவடை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் சராசரி அளவைவிட அதிகம் பெய்தது. மேலும், எதிர்பாராமல் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையாலும் மழை பொழிவு அதிகரித்தது. எனவே, நீர்நிலைகள் வேகமாக நிரம்பும் நிலை ஏற்பட்டது.

அதன்தொடர்ச்சியாக, தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று அதிகாலை வரை மிதமான மழை பெய்தது. தொடர்ந்து, நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதனால், திருவண்ணாமலையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜமுனாமரத்தூரில் 4 மிமீ, வந்தவாசியில் 4 மிமீ, போளூரில் 3.20 மிமீ, திருவண்ணாமலையில் 5.30 மிமீ, தண்டராம்பட்டில் 4.40 மிமீ, கலசபாக்கத்தில் 17 மிமீ,  சேத்துப்பட்டில்  5 மிமீ, கீழ்பென்னாத்தூரில் 11.20 மிமீ, வெம்பாக்கத்தில்  1 மிமீ மழை பதிவானது.மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின்(நீர்வளம்) கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 405 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. 60 ஏரிகள் முழுமையாக நிரம்பும் நிலையில் உள்ளன. மீதமுள்ள ஏரிகள் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நிரம்பியிருக்கிறது.
சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் தற்போது 118 அடி நிரம்பியிருக்கிறது. மேலும், அணையின் மொத்த நீர் கொள்ளளவான 7,321 மில்லியன் கனஅடியில், தற்போது 7,086 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

மேலும், அணைக்கு வினாடிக்கு 2,080 கனஅடி தண்ணீர் வருகிறது. அணை நிரம்பும் நிலை உள்ளதால், வினாடிக்க 1,950 கனஅடி நீர் தென்பெண்ணை வழியாக திறந்துவிடப்படுகிறது. நாளை 119 அடி வரை தண்ணீர் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 54.94 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர்மட்டம் 21.99 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 57.66 அடியாகவும் உயர்ந்திருக்கிறது. அதேபோல், இந்த 3 அணைகளுக்கும் தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான விளை நிலங்களில் மழைநீர் தேங்கியிருக்கிறது. எனவே, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிரில் தண்ணீர் தேங்கியிருப்பதால், அறுவடை பாதிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
எனவே, வயலில் இருந்து தண்ணீர் வடிந்ததும் நெல் அறுவடையை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து மழை வலுவடைந்தால், நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர் மகசூல் இழந்து பாதிக்கப்படும் என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.

Tags : Tiruvannamalai district , Tiruvannamalai : In Tiruvannamalai district, the water bodies are overflowing due to continuous rains.
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே...