×

குமரியில் பதராக மாறிய நெற்பயிர்கள் வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆய்வுக்கு வருகிறது-விளை நிலங்களை பார்வையிடுகிறார்கள்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் போதிய விளைச்சல் இல்லாமல் நெற்பயிர்கள் முளைத்து பதராக மாறி உள்ளது தொடர்பாக வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆய்வுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.குமரி மாவட்டத்தில் தற்போது கும்ப பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. சி.ஆர். 1009 சப் 1 என்ற நெல் விதையை வாங்கி விவசாயிகள் பயிர் செய்தனர். 150 நாட்களில் கதிர் வர வேண்டிய நெற்பயிராகும். வேளாண்மை துறை மூலம் உரிய பரிசோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட பின் தான் விவசாயிகள் 1009 சப் 1 வகை நெல் விதைகளை வாங்கி பயிர் செய்தனர். இவ்வாறு பயிர் செய்யப்பட்ட நெல் பயிராக வராமல், பதராக மாறி உள்ளன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கான காரணம் தெரியாமல் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். ரகம் மாறி விட்டதா? அல்லது மரபியல் காரணமா? என்பது தெரியவில்லை.பறக்கை குளம் மூன்றாவது பரவு பகுதியில் சுமார் 300 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் போதிய விளைச்சலுக்கு வராமல் பதராகி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பறக்கை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து தான், 1009 சப் 1 என்ற நெல் விதையை விவசாயிகள் வாங்கி பயிரிட்டனர். 150 நாட்களில் கதிர் வர வேண்டிய நெல் பயிர் தற்போது 60 முதல் 80 நாட்களில் பூத்து கதிர் வந்த நிலையில் அவை நெல் கதிராக வராமல் முற்றிலும் பதறாக மாறி உள்ளது.

 கட்டிமாங்கோடு, புத்தேரி, தேரூர் போன்ற பகுதிகளிலும் பரவலாக இது போன்ற பாதிப்பு உள்ளது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, குருந்தன்கோடு ஒன்றியங்களில் அதிகளவில் பாதிப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து துறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் புகார் செய்துள்ளனர். வேளாண் பல்கலைக்கழக வல்லுனர் குழு மூலம் முழுமையாக கள ஆய்வு செய்து, எதிர்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் ஏக்கருக்கு ₹30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

இது குறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்ட போது, முறைப்படி ஆய்வு செய்யப்பட்ட பின் தான் 1009 சப் 1 ரக விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. மண்ணின் தரமும் ஆய்வு செய்யப்பட்டது. 1009 சப் ரக விதைகள் குமரி மாவட்டத்தில் நல்ல விளைச்சல் தரக்கூடிய ரகம் தான். இந்த முறை ஏன்? இப்படி மாறியது என்பது தெரிய வில்லை. இது குறித்து கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பாக ஏற்கனவே ஆய்வு செய்துள்ளனர். 2ம் கட்ட ஆய்வுக்காக இன்று அல்லது நாளை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பேராசிரியர்கள் குழு ஆய்வு செய்து வருகிறார்கள் என்றனர்.



Tags : Kumari—visiting , Nagercoil: A group of agricultural scientists regarding the sprouting of paddy crops without sufficient yield in Kumari district
× RELATED குமரியில் பதராக மாறிய நெற்பயிர்கள்...