பவானி, அம்மாபேட்டை வட்டாரத்தில் 4,000 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி அமோகம்

*பொங்கல் சமயத்தில் அறுவடை துவங்க விவசாயிகள் ஆயத்தம்

பவானி : மேட்டூர் அணையின் மேற்குக்கரை வாய்க்கால் பாசன பகுதிகளான பவானி, அம்மாபேட்டை வட்டாரங்களில் 4,000 ஹெக்டர் பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது கதிர் பிடிக்கும் பருவத்தில் உள்ளதால் பொங்கல் பண்டிகை சமயத்தில் அறுவடை பணிகள் துவங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணை நிரம்பியதை தொடர்ந்து ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. வழக்கமாக வாய்க்கால் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ம் தேதிய தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், காவிரி ஆற்றில் உபரிநீர் வீணாக செல்வதால், மேற்கு மற்றும் கிழக்குக்கரை வாய்க்கால்களில் வழக்கமாக திறக்கப்படும் நாளுக்கு முன்னதாக, கடந்த ஜூலை 16ம் தேதியே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டாலும் விவசாயிகள் மத்தியில் நெல் சாகுபடி பணிகளை துவங்க ஆர்வமின்றி காணப்பட்டனர். சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னரே நெல் நாற்றாங்கால் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவ்வப்போது பெய்த தொடர்மழைக்கு இடையே பரவலாக நெல் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். பவானி, அம்மாபேட்டை வட்டாரத்தில் மேட்டூர் மேற்குக்கரை வாய்க்கால் பாசன பகுதியில் பவானி வட்டாரத்தில் சுமார் 1,680 ஹெக்டர் பரப்பளவிலும், அம்மாபேட்டை வட்டாரத்தில் 2,400 ஏக்கர் பரப்பளவிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில், நெல் ரகங்களான ஏடிடி 38, ஏடிடி 39, ஐஆர் 20, பிபிடி, திருச்சி 3,  வெள்ளை பொன்னி பரவலாக அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதுதவிர, கவனி, சீரக சம்பா, கிச்சடி சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய ரகங்களை இயற்கை விவசாயம் மூலம் தங்களின் வீட்டு தேவைக்காக விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதில், தூயமல்லி ரகத்தை ஒரு சிலர் மட்டுமே வணிக ரீதியான தேவைக்கும் பயிரிட்டுள்ளனர்.

ஒற்றை நாற்று முறை : நெல் சாகுபடியில் அதிக விளைச்சல் தரும் ஒற்றை நாற்று நடவு முறையில் பவானி வட்டாரத்தில் சுமார் 1,349 ஹெக்டரிலும், அம்மாபேட்டை வட்டாரத்தில் சுமார் 2,000 ஹெக்டர் பரப்பளவிலும் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். சாதாரண நடவில் 732 ஹெக்டரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.தண்ணீர் தட்டுப்பாடு இல்லை :  மேட்டூர் அணை தொடர்ந்து நிரம்பிய நிலையிலேயே இருந்ததால் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறையாமல் திறக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து மழையும் பெய்து வந்ததால் தண்ணீரின் தேவையும் குறைந்தே காணப்பட்டது. இதனால், பயிருக்கு தேவையான தண்ணீரை பாய்ச்சுவதில் விவசாயிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. மேலும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உதவியாக இருந்தது.

வாய்க்கால் தண்ணீர் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுவதால் பயிர்களில் நோய்த்தாக்குதல் மிகக்குறைந்த அளவிலேயே காணப்பட்டது. பூச்சிகள் மேலாண்மை சரியாக மேற்கொள்ளப்பட்டதால் பயிர்கள் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மகசூல் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது கதிர் பிடித்து வளர்ந்துள்ள நிலையில் பொங்கல் பண்டிகை சமயத்தில் அறுவடை பணிகள் தொடங்கும் எனவும், ஒரு மாதத்துக்கு மேல் பரவலாக அறுவடை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு பவானி, அம்மாபேட்டை வட்டார விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

பருவம் தவறும் மழையால் மகசூல் பாதிக்கும் அபாயம்

வழக்கமாக காணப்படும் மழை, பனி, வெயில் காலங்களின் தட்பவெட்ப நிலையில் அடிக்கடி மாறுபாடுகள் ஏற்பட்டு வருவதால் நெல் மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.  ஐப்பசி மாதத்தில் மழை பொழிவு காணப்படும். கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படும். தற்போது பருவமழை காலம் தவிர்த்து அனைத்து காலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நெல் பூப்பருவத்தில் கனமழை பெய்தால் விளைச்சல் பாதிக்கும் நிலையும் உள்ளது. மேலும், நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

கூலி உயர்வால் விவசாயிகள் தவிப்பு

நெல் சாகுபடிக்கு ஆண்டுதோறும் மூலதனச் செலவு அதிகரித்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நெல் நாற்றங்கால் தயார் செய்தல், விதை நெல் வாங்குதல், முதல் உழவு, வரப்பு பூசுதல், உரங்கள் மற்றும் நடவுப் பணிக்கு கடந்த ஆண்டை காட்டிலும் கூலி உயர்ந்துள்ளது. ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் நடவுக்கு மட்டும் செலவாகிறது.  மேலும், பூச்சிகள், நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகள், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான உரங்கள், மருந்து தெளிக்கக் கூலியும் உயர்ந்துள்ளது. இதனால், வழக்கமாக ஆகும் செலவை காட்டிலும் நெல் சாகுபடி செலவு அதிகரித்துள்ளது விவசாயிகளிடையே தவிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: