கிளியனூர் சோதனைச்சாவடியில் போலீசாரிடம் இருந்து இ-செலான் மெஷினை பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது

வானூர் : கிளியனூர் சோதனைச்சாவடியில் போலீசாரிடம் இருந்து இ-செலான் இயந்திரத்தை பறித்துச் சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பாலத்தின் அடியில் வீசப்பட்ட கருவியும் மீட்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூரில் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் ஏட்டுகள் திருஞானம் மற்றும் சக்திவேல் ஆகியோர் சம்பவத்தன்று பணியில் இருந்தபோது, இரண்டு நபர்கள் புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

அவர்களை சோதனை செய்வதற்காக நிறுத்திய போலீசார் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு ஸ்பாட் பைன் போடுவதற்காக கையடக்க கணினியை (இ-செலான் கருவி) எடுத்துள்ளனர். அப்போது வாகனத்திலிருந்த இருவரும் அந்த இயந்திரத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். அதிர்ச்சியடைந்த ஏட்டு திருஞானம் கிளியனூர் காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 இந்நிலையில் இயந்திரத்தை பறித்துச் சென்ற நபர்கள் திருவண்ணாமலை மாவட்டம் சோமாஸ்பாடியை சேர்ந்த சந்தோஷ் (20), கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா சீர்பாதநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (22) என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், போலீசாரிடம் இருந்து பறித்து சென்ற இயந்திரத்தை கொந்தமூர் மேம்பாலத்துக்கு கீழே வீசிவிட்டு சென்றதாக கூறியதின் பேரில் அங்கு சென்ற போலீசார், அதனை தேடிப்பார்த்தபோது அங்கு கருவி இல்லை.

பின்னர் விசாரித்தபோது லாரி டிரைவர் செந்தில்குமார் (40), பாலத்தின் அடியில் இந்த கருவி கிடைத்ததாக கூறி அதனை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தோஷ், சதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: