×

பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை பார்த்தசாரதி சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறுற்று வருகிறது. இங்கு நின்ற கோலத்தில் வீர நிலையில் மீசையுடன் வெங்கட கிருஷ்ணராகவும் யோக நிலையில் யோக நரசிம்மராகவும், யோகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதராகவும் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிக்கிறார். வரும் ஆண்டும் இங்கு வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 23ம் தேதி திருமொழித் திருநாள் எனப்படும் பகல் பத்து விழா தொடங்கி நடந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து விழாவும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாக்கள் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக வைகுண்ட ஏகாதசி விழா ஜனவரி 2ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெறும். இதையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு உள் பிரகார புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள். அதன் பிறகு அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் நடைபெறும். இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நடைபெறும். அதனை தொடர்ந்து 11.30 மணிக்கு பார்த்த சாரதி சுவாமி உற்சவர், நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறும்.

Tags : Vaikunda Ekadasi ,Parthasarathy Temple , Vaikunda Ekadasi preparations are in full swing at Parthasarathy Temple
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்