கர்நாடகாவில் மீண்டும் தீவிரவாதிகள் நாசவேலை? பார்சலில் வந்த மிக்சி வெடித்து சிதறியது: கூரியர் நிறுவன உரிமையாளர் படுகாயம்

ஹாசன்: மங்களூருவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பு அடங்குதற்குள் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் அலுவலகம் ஒன்றில் பார்சலில் வந்த மிக்சி வெடித்து சிதறியது. இதில் கூரியர் அலுவலக உரிமையாளர் படுகாயம் அடைந்தார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஷிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முகமது ஷாரிக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவன் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவன் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், ஹாசன் மாவட்டம் கே.ஆர்.புரம் பகுதியில் தனியார் கூரியர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் மிக்சி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பார்சலை கூரியர் அலுவலக ஊழியர் சசி என்பவர் சோதித்துள்ளார். அப்போது திடீரென மிக்சி வெடித்து சிதறியது. இதில் ஊழியர் சசிக்கு கை மற்றும் உடலின் சில பாகங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இவரை அலுவலக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹாசன் மாவட்ட எஸ்பி ஹரிராம் சங்கர், கூரியர் அலுவலகம் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ‘கூரியரில் வந்த மிக்சி பார்சல் திடீரென வெடித்தது. அதில் இருந்த பிளேட் ஒன்று சசி என்ற ஊழியரின் கை மற்றும் உடலின் சில பாகங்களில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆணி, பால் பியரிங் போன்ற குண்டு சம்பந்தமான பொருட்கள் எதுவும் காணப்படவில்லை. காயமடைந்த சசி சுயநினைவோடு தான் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. மிக்சி வயரை பிளக் பாயின்டில் சொருகி சோதனை மேற்கொண்ட போது வெடித்ததா அல்லது அப்படியே வெடித்ததா என்று தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கூரியர் அலுவலக கண்ணாடி சேதமடைந்துள்ளது. மைசூருவில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வெடி விபத்தா அல்லது தற்செயலாக நடந்ததா என்று விசாரணையில் தெரியவரும். மேலும் பார்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது. யாருக்கு அனுப்பப்பட்டது என்று விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: