ஒடிசா ஓட்டலில் அடுத்தடுத்து மர்மம் புடினை விமர்சித்த ரஷ்ய எம்பி மரணம்: 3வது மாடியிலிருந்து தவறி விழுந்தார்

ராயகாடா: ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ். பெரிய கோடீஸ்வரர். இவர் தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்கள் 4 பேருடன் ஒடிசாவுக்கு கடந்த 21ம் தேதி சுற்றுலா வந்தார். ராயகடா பகுதியில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்தார்கள். கடந்த 22ம் தேதி பாவெலுடன் வந்த விளாதிமிர் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் டிசம்பர் 25ம் தேதி ஓட்டல் 3வது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்து பாவெலும் மர்மமாக மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். அவரது குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அவரது உடலை போலீசார் தகனம் செய்து விட்டனர். சுற்றுலா வழிகாட்டி ஜிதேந்திர சிங் என்பவர் கூறுகையில்,’ 4 ரஷ்யர்களும் அளவுக்கு அதிகமாக குடித்தார்கள். ஓட்டல் பாரில் அதிக அளவு மதுபானங்களை வாங்கிச்சென்றனர்’ என்று தெரிவித்தார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரை மேற்கொண்டு வரும் அதிபர் புடினை கடுமையாக விமர்சித்தவர்களில் பாவெலும் ஒருவர். அவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இடத்தில் மர்மமாக மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: