சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி 30ம் தேதி துவக்கம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி வரும் 30ம் தேதி தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை தீவுத்திடலில் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். பள்ளி அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு மார்ச் மாதத்தில் முடிப்பது வழக்கம். நாளடைவில் ஜனவரி மாதத்தில் துவக்கப்பட்டது. கொரோனா காரணமாக  கடந்த இரு ஆண்டுகளாக சுற்றுலா பொருட்காட்சி நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு பொருட்காட்சியை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக கண்காட்சி வரும் 30ம் தேதி தொடங்கப்படுவதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி தீவுத்திடலில் பொருட்காட்சி தொடங்குவதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 70 நாட்கள் நடத்தப்படும் பொருட்காட்சியில் அரசு துறைகளுக்கான அரங்குகள், பெண்கள், சிறார்களுக்கென 80க்கும் மேற்பட்ட வகையில் பல்வேறு அரங்குகள், விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகிறது. அம்சங்களுடன் கூடிய ராட்டினங்கள், பொருட்கள் வாங்குவதற்கு உரிய கடைகள், திண்பண்டங்கள், உணவகங்கள், பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம் ஆகியவையும் இடம் பெறவுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பொருட்காட்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி தகவல் தெரிவத்தார்.

Related Stories: