சென்னை: செங்குன்றம் பகுதியில் இருந்து 33 பக்தர்கள், மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றனர். தரிசனம் முடித்துவிட்டு, மயிலம் முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய புறப்பட்டனர். வேனை செங்குன்றம் பகுதியை சேர்ந்த பாலு மகன் வெங்கடேசன் (35) ஓட்டினார். திண்டிவனம் கருணாவூர் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் வந்த மற்றொரு வேன், சாலையில் கவிழ்ந்த வேன் மீது மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த 5 சிறுவர்கள் உள்பட 28 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.