திருச்சி அரசு மருத்துவமனையில் உருமாறிய கொரோனா நோய் சிகிச்சைக்கு தனி வார்டு அமைப்பு: 125 படுக்கைகள் தயார்

திருச்சி: சீனாவில் உருமாறிய பிஎப் 7 என்ற கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இது ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்தியாவிலும் 4 பேரை தாக்கி உள்ளது.  இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை உருமாறிய கொரோனா நோய் தொற்று சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. மேலும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு வரும்போது செயல்படுத்த வேண்டிய முதல் உதவிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த ஒத்திகையில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி, கொண்டு வரப்பட்டவுடன் அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உடனடியாக ஆக்சிஜன் வாயு அளிப்பது மற்றும் அவரின் உடல்நிலை சீராக உள்ளதா என்பதை ஆராய்வது உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் நடைபெற்றது.

மருத்துவமனை டீன் நேரு, மருத்துவக் கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் மேற்பார்வையில் ஒத்திகை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அரசு மருத்துவமனை டீன் நேரு கூறியதாவது: திருச்சி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்காக 20 படுக்கை கொண்ட வார்டு அமைக்கப்பட்டிருந்தது. அதில் தற்போது 4 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோ னா நோயாளிகளுக்காக ஒன்றிய அரசு உத்தரவுக்கிணங்க, 50 படுக்கைகள், 50 சிலிண்டர் படுக்கைகள், 25 தீவிர சிகிச்சை படுக்கைகள் என மொத்தம் 125 படுக்கைகள் கொண்ட புதிய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

Related Stories: