டெல்லி நடைபயணத்தில் காந்தி, நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் வரிசையில் வாஜ்பாயை ஏற்ற ராகுல் - நரசிம்ம ராவை புறக்கணித்தது ஏன்?.. காங்கிரஸ் - பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல்

புதுடெல்லி: டெல்லி நடைபயணத்தில் காந்தி, நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் காந்தி, வாஜ்பாய் போன்ற தலைவர்களின் நினைவிடங்களில் மரியாதை செய்த ராகுல் காந்தி, நரசிம்ம ராவின் நினைவிடத்திற்கு செல்லாததால் தேசிய அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக இவ்விவாதம் மாறியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையானது கடந்த 2 நாட்களுக்கு முன் ெடல்லிக்குள் நுழைந்தது. பண்டிகை காலம் என்பதால் ஒரு வார ஓய்வுக்கு பின்னர் மீண்டும் நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்க உள்ளார்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் வீசும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, வாஜ்பாய் ஆகியோரது நினைவிடங்களில் ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செய்தார். இவற்றில் முன்னாள் வாஜ்பாயின் நினைவிடமான ‘சதைவ் அடல்’ நினைவிடத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தது தேசிய அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், ‘வாஜ்பாயின் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி செலுத்தியது ஒரு நாடகம்.

வாஜ்பாய் நேர்மையின் சின்னம்; அமைதியின் தூதராவார். இந்தியாவை இழிவுபடுத்துவதிலும், வெறுப்பை பரப்புவதிலும் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார்’ என்றார். அதேபோல் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மால்வியா வெளியிட்ட பதிவில், ‘இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது, ஐதராபாத்தில் உள்ள பி.வி.நரசிம்மராவின் நினைவிடத்திற்கு ராகுல் காந்தி செல்லவில்லை. அவர் நடைபயணம் மேற்கொண்ட வழியில் தான், நரசிம்ம ராவின் நினைவிடம் உள்ளது. முன்னாள் பிரதமர்களை மதிப்பதில் ராகுல்காந்தி அக்கறை உள்ளவராக இருந்தால், ஏன் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் நினைவிடத்திற்கு செல்லவில்லை’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேற்கண்ட விவகாரம் தேசிய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நரசிம்மராவ் - நேரு குடும்பத்திற்கு இடையிலான கடந்த கால விஷயங்களும் பேசப்படுகின்றன. காங்கிரஸ் கட்சி கடந்த 1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது நேரு குடும்பத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தலைவராக ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நரசிம்ம ராவ் பிரதமராக பொறுப்பேற்றார். மேலும் அவரே காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். அவரை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அகற்ற முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது.

இருந்தும் தனது 5 ஆண்டுகால ஆட்சியை வெற்றிகரமாக நரசிம்ம ராவ் நிறைவு செய்தார். அதன்பின் 1996ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்யவில்லை. அதன்பின் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரான பின், நரசிம்ம ராவ் கட்சியின் மிகவும் சக்திவாய்ந்த குழுவான செயற்குழுவில் கூட இடம் பெறவில்லை. பல விஷயங்களில் சோனியாவுக்கும் நரசிம்ம ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை தடுக்க நரசிம்ம ராவ் தயக்கம் காட்டியதாகக் கூறப்படுவதும், அப்போதைய காலகட்டத்தில் வாஜ்பாயுடன் அவருக்கு அதிக தொடர்பு இருந்ததும் கூறப்படுகிறது.

மேலும் போபர்ஸ் ஊழலில் சிக்கிய ராஜிவ் காந்திக்கு எதிரான வழக்கு விவகாரத்திலும், நரசிம்ம ராவின் செயல்பாடுகளில் அதிருப்தி நிலவி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு நரசிம்ம ராவ் மரணம் அடைந்த பின்னர், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அவரது உடலை வைக்க காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்கவில்லை. நரசிம்ம ராவ் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லியில் அவரது பெயரில் நினைவுச்சின்னம் கட்டப்பட்டது; ஆனால் அந்த நேரத்தில் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தது. கடந்த 1991ம் ஆண்டில் ஒன்றிய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் இருந்த காலத்தில், அவர் நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றினார்.

மன்மோகன் சிங்கின் சுதந்திரமான முடிவுகளுக்கு, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் உறுதுணையாக இருந்தார். இருந்தாலும் கடந்த 2020ம் ஆண்டுவாக்கில் பல ஆண்டுகளுக்கு பின் நரசிம்ம ராவின் தலைமைப் பண்பை சோனியா காந்தி பாராட்டி பேசினார். அப்போது, தெலங்கானாவில் நரசிம்ம ராவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கடந்த 2015ம் ஆண்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‘நரசிம்ம ராவை புறக்கணிப்பது கட்சியின் தவறு’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

9 டிகிரி செல்சியஸில் எப்படி?

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் இருந்து வருகிறது. சூடான ஆடைகள் அணியாமல் வெளியே வரமுடியாது. வீட்டிற்குள்ளும் இருக்க முடியாது. ஆனால் ராகுல்காந்தி தனது நடைபயணத்தின் போது, சாதாரண டி-சர்ட் மட்டுமே அணிந்திருந்தார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, ‘ஏழைகள், விவசாயிகள், மாணவர்கள் போன்றோர் ஏன் குளிரை உணரவில்லை? அவர்களிடம் இந்த கேள்வி ஏன் கேட்கப்படவில்லை?’ என்று கேள்வி எழுப்பினர். இவரது இந்த பதிலுக்கு நெட்டிசன்கள் பலவாறாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அவற்றில் லக்ஷ்மண் என்ற நபர், ‘ராகுலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக உள்ளது. எதிர்காலத்தில் அவர் இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்பதால், அவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். ராபர்ட் டவுனி என்ற பெண் வெளியிட்ட பதிவில், ‘டெல்லியின் வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. அப்படியிருந்தும் ராகுல்காந்தி எப்படி டி-சர்ட் மட்டும் அணிந்து செல்கிறார். அவருக்கு எங்கிருந்து இவ்வளவு சக்தி கிடைக்கிறது’ என்று கேட்டுள்ளார்.

நரசிம்ம ராவின் பேரன் அதிருப்தி

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் விவகாரம் பெரிதாக்கப்பட்ட நிலையில், நரசிம்ம ராவின் பேரனும், தெலங்கானா பாஜக தலைவர்களில் ஒருவரான என்வி சுபாஷ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘நேரு குடும்பத்தைச் சேராத ஒரு தலைவரின் சேவையை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அங்கீகரிக்காது என்பதற்கு அந்த கட்சியின் வரலாறே சாட்சி. ஐதராபாத்தில் உள்ள இந்திரா காந்தியின் சிலை அருகே நடந்த பேரணியில் பேசிய ராகுல் காந்தி, நரசிம்ம ராவின் நினைவிடத்திற்கு செல்லவில்லை. அவரை வேண்டுமென்றே புறக்கணித்து சென்றார். நரசிம்மராவின் மறைவுக்குப் பிறகு அவருக்கு கட்சியின் சார்பில் பிரியாவிடை அளிக்கவில்லை. நாட்டின் பொருளாதார சீர்திருத்தவாதியாக அறியப்பட்ட நரசிம்மராவின் சேவையை காங்கிரஸ் தலைமை அங்கீகரிக்கவில்லை’ என்றார்.

Related Stories: