திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக இயக்கப்படும் ரயில்கள்

திருவள்ளூர்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இன்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் முதல் 2 மணி நேரத்திற்கும் மேலாக, சாலையில் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பூண்டி, மணவாளநகர், பெரியகுப்பம், காக்களூர், ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த கடும் பனிப்பொழிவானது காணப்பட்டது.

மேலும் சென்னையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பேருந்துகள், அரசு பேருந்துகள், லாரிகள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததாலும், சாலை செல்லும் வழி தெரியாததாலும் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி  மெதுவாக சென்றனர். அதேபோல் திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாக சென்றன.

இதனால் சென்னை-திருத்தணி மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயில் தாமதமாக செல்கின்றன. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு எந்த ரயில் எந்த நடைமேடையில் வருகிறது என தெரியாததால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் போதே சென்று ரயில் ஏற வேண்டிய நிலையும் இருந்தது. பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில் நிலையம் அருகே வரும் விரைவு ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

Related Stories: