போலி வாரிசு சான்று மூலம் சொத்தை அபகரித்த தாய், தங்கை பத்திரத்தை ரத்து செய்யக்கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணா-மாவட்ட பதிவு துறை அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பத்தூர் :  போலி வாரிசு சான்று மூலம் சொத்தை அபகரித்த தாய் தங்கையின் பத்திரத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவுத்துறை அலுவலகம் முன்பு  4 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அதிமுக கிளை செயலாளர் லியோ பிரான்சிஸ் சேவியர் (60). இவர் கடந்த கொரோனா நோய் தொற்று காலத்தில் உயிரிழந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஆலிஸ் அக்சிலியா என்பவர் சிவராஜ்பேட்டை பகுதியை சேர்ந்த வீரமணிகண்டன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது தந்தை இறந்த பிறகு வாரிசு உரிமைச் சான்று பெற்றனர்.

அதில் தாய் கேத்தரின் ஜார்ஜுனா, மகள்கள் ஆலிஸ் அக்சிலியா, இவாஞ்சலின் ரோஷினி ஆகிய மூன்று பேருக்கும் வாரிசுதாரர்களாக வட்டாட்சியர் மூலம் சான்று வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரது தாய் கேத்தரியின் ஜார்ஜுனா மற்றும் சகோதரி இவாஞ்சலின் ரோஷினி ஆகிய இருவரும் போலியாக வாரிசு சான்று தயாரித்து அதில் இரண்டு பேர் மட்டுமே வாரிசு என்று ஐந்து ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்துள்ளனர்.

இதனை அறிந்த ஆலிஸ் அக்சிலியா போலியான ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையம் மற்றும் மாவட்ட பத்திரப்பதிவு துறை அதிகாரி பிரகாஷிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவை விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் மக்கள் குறைதீர்வு கூட்டத்தின் போது கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் போலி வாரிசு சான்று தயாரித்த தாய், தங்கை மீது நடவடிக்கை எடுக்க கோரி கைக்குழந்தையுடன் ஆலிஸ் அக்சிலியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நான்காவது மாடியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன்பு 4 மாத கைக்குழந்தையுடன் ஆலிஸ் அக்ஸிலியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், தகவலறிந்து வந்த மாவட்ட பதிவாளர் பிரகாஷ், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போலியான வாரிசு சான்றிதழ் வைத்து வங்கியில் அடமான கடன் பெற்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட தாய், தங்கை மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு வரும் ஜனவரி 9ம் தேதிக்கு நேரில் வரும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.விசாரணையின்போது, அவர்கள் மோசடியாக வாரிசு சான்று கொடுத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தால், உடனடியாக பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து இளம்பெண் போராட்டத்தை கைவிட்டு சென்றார். இதனால் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: