×

சிவகாசி அருகே தைப்பொங்கலுக்காக பயிரிட்ட செங்கரும்பு அறுவடைக்கு தயார்-விற்பனைக்கு வியாபாரிகளை எதிர்பார்க்கும் விவசாயிகள்

சிவகாசி : சிவகாசி அருகே உள்ள செவலூர், எரிச்சநத்தம், நடையனேரி பகுதிகளில் பொங்கலுக்கு பயிரிட்ட செங்கரும்புகள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. விற்பனைக்காக விவசாயிகள் வியாபாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.தமிழர் திருநாளான தை முதல் நாள் பொங்கல் விழா, தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் என்றவுடன் முதலில் நமக்கு நினைவு வருவது தித்திக்கும் செங்கரும்புதான். பொங்கல் திருவிழாவை பொருத்தவரை விவசாயத்தை ஒப்பிட்டு கொண்டாடப்படுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் ஒப்பிடுகின்றனர் தமிழர்கள்.

மேலும், தமிழர்கள் இந்த விழாவை உழவுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் சூரியனுக்கும், உழவுக்கு பயன்படுத்தும் உயிரினங்களான ஆடு, மாடுகள் மற்றும் உழவு பொருட்களான ஏர், மண்வெட்டி, நெல் அறுவடை செய்யும் அரிவாள் என உழவர்கள் உழவுக்கு பயன்படுத்தும் அனைத்தையும் வணங்கி வழிபடுவது வழக்கம்.இந்த விழாவானது போகி பண்டிகையில் தொடங்கி கரிநாள் வரை நான்கு நாட்கள் நடைபெறும். இதில் போகி பண்டிகை, காணும் பொங்கல், மாட்டு பொங்கல், கரிநாள் என 4 நாட்கள் நடைபெறும். இப்பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய வெளிநாடுகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. வரக்கூடிய பொங்கல் பண்டிகையை தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது செங்கரும்பு, இஞ்சி, மஞ்சள், வெல்லம் மற்றும் பொங்கல் பானையாகும். பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வீடுகளிலும் தவறாமல் இடம் பெறுவது செங்கரும்பு. புதிய தம்பதிகள் மட்டுமின்றி உடன் பிறந்த சகோதரிகளுக்கு செங்கரும்பு அடங்கிய பொங்கல் சீதனம் கொடுக்கும் பழக்கமும் காலம் காலமாக தமிழர்களிடையே இருந்து வருகிறது.

இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிவகாசி அருகே விருதுநகர் மாவட்ட எல்லையான செவலூர், எரிச்சநத்தம், நடையனேரி பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் செங்கரும்பு விவசாயம் செய்துள்ளனர். இந்த பொங்கல் கரும்பு பண்டிகை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இவ்வாறு சாகுபடி செய்யப்பட்டுள்ள செங்கரும்புகள் விருதுநகர் மாவட்டம், மதுரை மாவட்ட பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாவட்டத்தில் பெரும்பாலும் மேலூர் கரும்புகள் அதிகம் இடம் பெற்ற போதிலும் எரிச்சநத்தம், நடையேனரி மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ள முருகனேரி கரும்புகள் மிகவும் சுவையாகவும், விலை சற்று குறைவாக கிடைப்பதால், இந்த பகுதி கரும்புகள் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி செங்கரும்பு மொத்த வியாபாரிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்ய விவசாயிகளை இன்னும் சில நாட்களில் தேடி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகாசியில் தற்போது சிவன்கோயில் பகுதியில் மேலூர், அலங்காநல்லூர் கரும்புகள் சில்லரை விலைக்கு விற்பணை செய்யப்படுகின்றன.

15 கரும்புகள் கொண்ட கட்டுகள் ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பொங்கல் நெருங்கும் நேரத்தில் விலை குறையும் என்று கரும்பு விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து செங்கரும்பு விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உரச்செலவு கூலி ஆட்கள் செலவு மற்றும் விவசாயத்திற்கான இடுபொருட்கள் செலவு ஆகியவை பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால், ஒரு ஏக்கர் செங்கரும்பு சாகுபடி செய்ய சுமார் 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் வரை செலவாவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Sivakasi , Sivakasi: Sugarcane planted for Pongal in Chevalur, Erichanatham and Ghadiyaneri areas near Sivakasi is ready for harvest.
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து