சிவகாசியில் பயன்பாடில்லா போலீஸ் கண்காணிப்பு கூண்டுகள்-புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் பயன்பாட்டுக்கு கட்டப்பட்டுள்ள நிழற்குடைகள் பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக நிற்கிறது. இவைகளை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசி மாநகர் பகுதியில் வாகனப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நகரில் உள்ள முக்கிய சாலைகள் ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டாலும், வாகன பெருக்கத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிவகாசி நகரில் உள்ள முருகன் கோவில், தேரடி விலக்கு, அம்பேத்கர் சிலை, பஸ்நிலையம், தெற்கு ரதவீதி, மேலரதவீதி ஆகிய இடங்களில், போலீசார் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசார் வெயில், மழை காலங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வசதியாக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிவகாசி டவுன் காவல்நிலையத்தில் கூடுதல் போலீசார் இல்லாததால் தெற்கு ரதவீதி சந்திப்பு சாலை, பழைய பஸ்நிலையம், விஸ்வநத்தம் சாலை, வாட்டர் டேங்க், வெம்பக்கோட்டை விலக்கு, மணிநகர் விலக்கு ஆகிய வாகனப் பெருக்கம் அதிகமாக உள்ள இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் இடையில் உள்ள தெருக்கள் வழியாக ஒரு வழிப்பாதையில் வாகன ஓட்டிகள் விதி மீறி செல்கின்றனர். இதனால் வாகன விபத்துக்கள் நடக்கின்றன.

இந்நிலையில், சிவகாசி மாநகரில் உள்ள போலீஸ் நிழற்குடைகளை பல இடங்களில் ேபாலீசார் பயன்படுத்துவதில்லை. இதனால், நிழற்குடைகள் சிதிலமடைந்து காட்சிப் பொருளாக நிற்கிறது.

ேமலும், நிழற்குடைகளை சரிவர பராமரிக்காததால் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. சிவகாசி தேரடி விலக்கில் உள்ள போலீஸ் நிழற்குடையில் போராட்ட அறிவிப்பு மற்றும் விளம்பர போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். நிழற்குடை உள்ளே பழைய பொருட்கள், காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.

நகரில் மைய பகுதியில் உள்ள போலீஸ் நிழற்குடை பயனற்று இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கனரா வங்கி விலக்கு, எஸ்எச்என் பள்ளி விலக்கு, விளாம்பட்டி ரோடு விலக்கிலும் உள்ள போலீசார் நிழற்குடை பயன்பாடின்றி போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளது. இது பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

எனவே சிவகாசி மாநகாில் உள்ள போலிஸ் நிழற்குடையை உடனே புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசியில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து காவல்பிாிவில் பணிபுரிந்த எண்ணிக்கை அடிப்படையிலேயே, தற்போதும் போலீசார் பணிபுாிந்து வருகின்றனர்.

சிவகாசி மாநகராட்சியாக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசார் பணி நியமிக்கப்படவில்லை. சிவகாசியில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நகருக்குள் வந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

Related Stories: