×

பாண்டவர்கள் வழிபட்ட ஆன்மீக தலம் ராயக்கோட்டையில் பிணி தீர்க்கும் வஜ்ஜிர தீர்த்தம்

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் பிணி தீர்க்கும் வஜ்ஜிர தீர்த்தம் எனும் மிகவும் பழைமை வாய்ந்த, பஞ்சபாண்டவர்கள் வந்து வழிபட்ட ஆன்மீக தலம் உள்ளது.
 மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் நாட்டை இழந்து, வனவாசம் இருந்த சமயத்தில், காடுகள் தோறும் நடந்து சுற்றியுள்ளனர். அப்படி வந்த சமயத்தில், அப்போதைய ராயர்துர்க்கம் என்னும் இப்போதைய ராயக்கோட்டை வனப்பகுதியில் நடந்து வந்த பாண்டவர்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது.

ஆனால், எங்கு தேடியும் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அர்ஜூனனிடம் சொன்ன போது, அவர் தன் வில்லினால், பூமியை நோக்கி அடித்தார். அப்போது பூமியில் இருந்து தண்ணீர் பீறிட்டு வந்ததாகவும், அதை பாண்டவர்கள் அருந்தி தாகத்தை தீர்த்துக் கொண்டதால், அந்த இடத்திற்கு வஜ்ஜிர தீர்த்தம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குளத்தில் தினம்தோறும் குளித்து விட்டு தான், அருகிலுள்ள மலையில் தூருவாச முனிவர் தவமிருந்ததால், இந்த மலைக்கு சிவ தூருவாசர் மலை என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

 இன்றும் வஜ்ஜிர தீர்த்தத்தில் இருக்கும் அத்திமர வேரில் இருந்து, சிறிய அளவில் தண்ணீர் வந்து, சிறிய தொட்டியில் நிரம்பி வெளியேறும் தண்ணீர், அருகிலுள்ள பெரிய தொட்டியில் நிரப்புகிறது. அந்த நீரில் மக்கள் குளிக்கின்றனர். அத்திமர வேரில் இருந்து தண்ணீர் வரும் இடத்தில் சிவலிங்கத்தை வைத்துள்ளனர். சிவலிங்கத்தை நனைத்துக் கொண்டு வெளியேறும் தண்ணீரில், மக்கள் குளிப்பதால் பல்வேறு நோய் உபாதைகளில் இருந்து குணமடைவதால், இதற்கு பிணி தீர்க்கும் வஜ்ஜிர தீர்த்தம் என பெயர் வந்ததாக கூறுகின்றனர்.

இந்த தீர்த்த குளத்தில் குளிக்க, பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து குளித்து விட்டு சுவாமியை கும்பிட வசதியாக சிவன் கோயில், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், நாகர் கோயில்களுடன், அனுமன் கோயில், 18 படிகளுடன் கூடிய ஐயப்பன் கோயில் இங்கு அமைந்துள்ளதால், ஐயப்ப பக்தர்கள் குளித்து விட்டு, பூஜைகள் செய்து விட்டு செல்கின்றனர்.

 இங்கு முகூர்த்த நாட்களில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து திருமணத்தை நடத்தி செல்கின்றனர்.  இத்தகைய சிறப்பு அம்சங்கள் கொண்ட  இக்கோயில், தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வருடந்தோறும் பங்குனி உத்திரத்திரத்தன்று நடைபெறும் தேர்த்திருவிழா நாளன்று, வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகர் தேர், ராயக்கோட்டையில் திருவீதி உலா நடைபெறுகிறது.

ஆடிப்பெருக்கு அன்று, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து குளித்து விட்டு செல்கின்றனர். புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கு நாளில் குளித்து விட்டு, தாலி மாற்றிக்கொண்டு தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்து, இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், தற்போது வஜ்ஜிர தீர்த்தம் களையிழந்து காணப்படுகிறது.



Tags : Pandavas ,Rayakottai , Rayakottai: Vajjira Theertha, the most ancient of Panchapandas, is the Dew-Dissolving Dew in Rayakottai, Krishnagiri District.
× RELATED 4 வழிச்சாலை பணிகள் தாமதமாவதால் ராயக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல்