சீசன் தொடங்கியது: வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் பல நாடுகளில் இருந்தும் வலசை வரும் பறவைகள்..!!

திருவாரூர்: வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் அரிவாள் மூக்கன், வெள்ளை கொக்கு, சாம்பல் நாரைகள் போன்ற உள்நாட்டு பறவைகள் அதிகளவில் வருகை தர தொடங்கியுள்ளன. இதனால் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 316 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வடுவூர் ஏரியை சுற்றிலும் வளமான ஈரநிலங்கள் அதிகளவில் உள்ளதால் பறவைகளின் விருப்பமான வலசை இடமாக உள்ளது. இந்த ஏரியில் தமிழக வனத்துறை சார்பில் கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை மதம் முதல் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் செயல்பட்டுவருகிறது.

இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் முதல் மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இனப்பெருக்கத்திற்காக வருகை தரும் பறவைகள் மார்ச் மாதம் வரை தங்கி தங்கள் நாடுகளுக்கு பறந்து செல்லும், இந்நிலையில் நடப்பாண்டுக்கான சீசன் தொடங்கியுள்ளதால் அரிவாள் மூக்கன், வெள்ளை கொக்கு, சாம்பல் நாரைகள் போன்ற உள்நாட்டு பறவைகள் அதிகளவில் வருகை தந்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்தும் ஆசிய ஓபன்பில், ஸ்பாட் பில் டக், காமன் கூட், பின்டெயில் வாத்து போன்ற பறவைகளும் வந்துள்ளன. ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பலவகையான பறவைகளும் இம்மாத இறுதியிலிருந்து வர கூடும் என்று எதிர்பார்க்க படுவதாக பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் உள்ள ராம்சார் சைட் எனப்படும் தொன்மைவாய்ந்த ஈரநிலங்களில் ஒன்றாக வடுவூர் உள்ளது. மேலும் சங்க இலக்கியங்களில் வரும் அஞ்சில் எனப்படும் அரிவாள் மூக்கன் பறவைகள் அதிகளவில் வசிக்கும் இடமாகவும் வடுவூர் ஏரி உள்ளது.

Related Stories: