குளச்சல் : சுனாமி தாக்குதலின் 18வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, குமரி கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலம் மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன.கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி கடலோர பகுதிகளை சுனாமி தாக்கியது. தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். குமரி மாவட்டத்தில் மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் பகுதிகளில் சுனாமி தாக்கி நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுனாமி தாக்குதல் தினத்தன்று, உயிரிழந்தவர்களின் நினைவிடங்களில் நினைவஞ்சலி பிரார்த்தனைகள், மவுன ஊர்வலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று சுனாமி தாக்குதலின் 18 வது ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன. நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடியில் 119 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் நேற்று காலை நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன.மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். இறந்து போன குழந்தைகள், உறவுகளை எண்ணி பெண்கள் கதறி அழுதனர். ஆண்டுகள் எத்தனை ஆனாலும் இந்த துயரத்தை எங்களால் மறக்க முடியாது என்றனர். கல்லறை தோட்டங்களில் சிறப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சிகளும் நடந்தன. மணக்குடி தேவாலயத்தில், பங்கு தந்தை அந்தோணியப்பன், இணை பங்கு தந்தை சுவிட்டன் தலைமையில் கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.
பின்னர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 500 பேர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமும் நடத்தினர். சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
குளச்சல் அருகே உள்ள ெகாட்டில்பாடு கிராமத்தில் சுனாமியில் உயிரிழந்த 199 பேரின் நினைவாக சுனாமி காலனியில் இருந்து பங்கு தந்தை ராஜ் தலைமையில் பலியானவர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் சென்றனர்.
ஊர்வலம் மேற்கு கடற்கரை வழியாக கொட்டில்பாடு சென்றடைந்தது. அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை நடைப்பெற்றது. பின்னர் புனித அல்லேசியார் ஆலயத்தில் சிறப்பு நினைவு திருப்பலி நடந்தது.
சுனாமி நினைவு நாளை முன்னிட்டு கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மற்ற கடற்கரை கிராமங்களிலும் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
குளச்சலில் நினைவஞ்சலி
குளச்சலில் சுனாமி தாக்குதலில் 414 பேர் பலியாகினர். அவர்கல் நினைவாக குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்குதந்தை டைனிசியஸ் சிறப்பு நினைவு திருப்பலி நடத்தினார்.
தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி கல்லறை தோட்டத்தில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலி செலுத்தினர். 18 ஆண்டுகள் கடந்தாலும் பலியானோர் நினைவாக பலர் கதறி அழுதனர். நினைவஞ்சலி நிகழ்ச்சியில் உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் சுனாமி நினைவுதினத்தையொட்டி நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.