தமிழக பா.ஜ.வில் இன்னொரு காணொலி கலாட்டா சூர்யா சிவா சந்தித்த வீடியோவை அண்ணாமலையிடம் கொடுத்தேன்: பாஜ திறன் வளர்ச்சி செயலாளர் அலிஷா அப்துல்லா பரபரப்பு பேட்டி

சென்னை: சூர்யா சிவா தன்னை சந்தித்து பேசிய வீடியோவை அண்ணாமலையிடம் கொடுத்ததாக பாஜ பெண் நிர்வாகி சென்னையில் நிருபர்களிடம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். பாஜவில் விளையாட்டு மற்றும் திறன்வளர்ச்சி மாநில செயலாளரும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: நான் இருக்கும் துறையான கார் மற்றும் பைக் ஓட்டும் வீராங்கனையாக எனக்கு 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. 3 நாட்களுக்கு முன், தனியார் வலைத்தளத்தில் சூரியா சிவா பேசியது அநாகரிகம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சியில் இணைந்தேன்.

அப்போது என்னிடம் சூரியா சிவா தொலைபேசி மூலம் பேசினார். என்னை பாஜவில் வேறு ஒரு பிரிவுக்கு மாறிவிடுமாறு சூரியா சிவா தெரிவித்தார். அவர் என்னை சிறுபான்மை பிரிவுக்கு மாற கூறினார். இதுகுறித்து அண்ணாமலையிடம் கூறினேன். அவர் அதை எல்லாம் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். சூரியா சிவா என்னுடைய அலுவலகம் வந்து பேசினார். அதற்கான வீடியோ ஆதாரம் அமர் பிரசாத் ரெட்டியிடம் கொடுத்தேன்.  பின்னர் அண்ணாமலைக்கு தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலை சூர்யா சிவாவிடம் இதுகுறித்து கண்டிப்புடன் தெரிவித்தவுடன் பின்னர் அவர் என்னிடம் பேசவில்லை. இப்போது சூர்யா சிவா கட்சியில் இல்லாத காரணத்தினால் என்னை பற்றி மிகவும் மோசமாக பேசி உள்ளார்.

இது குறித்து முறையான நடவடிக்கைகளை கட்சி மேலிடம் எடுக்கும் என்று நம்புகிறேன். அவர்கள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். பாஜவில் ஏற்கனவே வீடியோ, ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சர்ச்சையால் பாஜவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அண்ணாமலை கட்சியில் இணைந்த பிறகு தான் வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாஜவில் உள்ள நடிகை காயத்ரி ரகுராம் தனது குமுறலை வெளிப்படுத்தி இருந்தார். தலைவர்களும் நம்முடைய ஆடியோ அல்லது வீடியோ எப்போது வெளியாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் கட்சியினருக்குள் போனில் பேசுவதையே தவிர்த்து வருகின்றனர்.

பாஜ தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் முதல் அனைத்து தலைவர்கள் பேட்டி கொடுத்த இடத்தில், இன்று ஆபாச ஆடியோ, வீடியோ தொடர்பாக உள்கட்சி விவகாரம் குறித்து பேட்டியளிக்க வேண்டிய நிலைக்கு தமிழக பாஜ மாறிவிட்டதே என்று அவர்கள் புலம்புகின்றனர். அதேபோல ஒரு கட்சிக்காரர் தன்னை சந்திக்க வந்ததை அலிஷா அப்துல்லா ஏன் வீடியோ எடுத்தார், அதை ஏன் அமர்பிரசாத் ரெட்டியிடம் கொடுத்தார்? அப்படி என்றால் அவரை யார் சந்திக்க வந்தாலும் அவர்களை அவர் வீடியோ எடுத்து வைப்பாரா என்று பாஜ தொண்டர்கள் மத்தியிலேயே பீதி நிலவுகிறது.

Related Stories: