×

ஐ.ஓ.பிக்கு அமலாக்கத்துறை விதித்த அபராதத்தில் தலையிட முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  டிரினிட்டி இன்டர்னேஷனல் என்ற நிறுவனம், டில்லி ஜனக்புரியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடப்புக் கணக்கை பராமரித்து வருகிறது. இந்த கணக்கில் இருந்து ஒரு கோடியே 54 லட்சத்து 20 ஆயிரத்து 800 ரூபாயை மும்பையில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டது. பின்னர் லண்டனில் அதே வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 1991ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு டில்லி அமலாக்கப்பிரிவு அபராதம் விதித்து உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து, வங்கி சார்பிலும், அதிகாரிகள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கப் பிரிவு உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உள்ளதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தொடர முடியாது. எனவே, அமலாக்கப் பிரிவு உத்தரவில் தலையிட முடியாது. அமலாக்கப்பிரிவு உத்தரவை எதிர்த்து 45 நாட்களுக்குள் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம்.அதுவரை,  அபராதத்துக்கு விதித்த தடை நீட்டிக்கப்படுகிறது. 45 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யாவிட்டால், அபராதம் விதித்து அமலாக்கப் பிரிவு இயக்குனர் பிறப்பித்த உத்தரவு இறுதியானது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : IOP ,Madras HC , Penalties imposed by enforcement department on IOP cannot be interfered with: Madras HC orders
× RELATED ரூ.2.14 கோடி மோசடி ஐஓபி வங்கி மேலாளருக்கு...