உடுமலை அருகே விபத்து வேன்-டெம்போ மோதி 4 பேர் பரிதாப பலி

உடுமலை:  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். மில் தொழிலாளி. இவரது தாய் ரக்ஷிதா பேகம் (55). இவர் தன்னுடைய மருமகள் ஆஷிபா பானு (35), பேத்தி  சஷ்மிதா (10), பேரன் இஸ்மாயில் (14) ஆகியோருடன் உடுமலையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு நேற்று வாடகை வேனில் சென்றார். வேனை நரசிங்காபுரத்தை சேர்ந்த டிரைவர் முத்து (57) ஓட்டினார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு அவர்கள் அனைவரும் வேனில் ஊருக்குத் திரும்பினர். மடத்துக்குளம் அருகே உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்காபுரம் பகுதியில் வந்தபோது டிரைவர் முத்துவின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி எதிரே வந்த டெம்போ மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் நொறுங்கிய வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஆஷிபா பானு, ரக்ஷிதா பேகம், சஷ்மிதா மற்றும் டிரைவர் முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிய இஸ்மாயிலை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்தால் இந்த நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: