×

ரயில்வே திட்டத்தில் முறைகேடு லாலுவின் பழைய வழக்கை மீண்டும் விசாரிக்கிறது சிபிஐ

புதுடெல்லி: லாலு பிரசாத் மீது பழைய வழக்கு ஒன்றை சிபிஐ மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளது. ஐமு கூட்டணி ஆட்சியின் போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், ரயில்வே நிலங்களை ஒதுக்கீடு செய்வதில் ஊழல் செய்ததாகக் கூறி கடந்த 2018 ம் ஆண்டு சிபிஐ வழக்கு தொடர்ந்தது. மும்பை, பாந்த்ராவில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு விடுவதில் டிஎல்எப் குழுமத்துக்கு லாலு சாதகமாக இருந்ததாகவும் அதற்காக அவருக்கு டெல்லியில் ஒரு பங்களா லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஊழல் தொடர்பான புகார்கள் நிரூபிக்க முடியாத நிலையில் வழக்கை முடித்து கொள்வதாக கடந்த 2021ம் ஆண்டு சிபிஐ அறிவித்தது.

பீகாரில் பாஜவுடன் சேர்ந்து ஆட்சி செய்து வந்த முதல்வர் நிதிஷ் குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் கூட்டணியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து லாலுவின் ஆர்ஜேடியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.  மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில் லாலு பிரசாத் மீதான ரயில்வே நில ஊழல் வழக்கை சிபிஐ மீண்டும் விசாரணை நடத்த துவங்கியுள்ளது.லாலு, அவரது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி, மகள்கள் சந்தா, ரஜினி யாதவ் ஆகியோரது பெயரும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.சிபிஐயின் இந்த நடவடிக்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாலுவுக்கு  சமீபத்தில் சிங்கப்பூரில் சிறுநீரக அறுவைச்சிகிச்சை  நடந்தது. அதிலிருந்து அவர் மீண்டு வரும் நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : CBI ,Lalu , CBI re-investigates Lalu's old case of railway project malpractice
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...