×

189 ரன்னில் சுருண்டது தென் ஆப்ரிக்கா: கேமரான் கிரீன் அபார பந்துவீச்சு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் (பகல்/இரவு), 2வது நாளே ஆஸி. அணி வெற்றியை சுவைத்து 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. ஆஸி. அணி தொடக்க வீரர் வார்னருக்கு இது 100வது டெஸ்ட் ஆகும். டாஸ் வென்ற ஆஸி.  பந்துவீச்சை தேர்வு செய்தது. கேப்டன் டீன் எல்கர், சரெல் எர்வீ இருவரும் தென் ஆப்ரிக்க இன்னிங்சை தொடங்கினர். எர்வீ 18 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த தியூனிஸ் டி புருய்ன் 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஓரளவு தாக்குப்பிடித்த எல்கர் 26 ரன் எடுத்து ரன் அவுட்டாக, ஸ்டார்க் வேகத்தில் தெம்பா பவுமா (1 ரன்), கயா ஸாண்டோ (5 ரன்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 19.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்திருந்த தென் ஆப்ரிக்கா, 28.3 ஓவரில் 67 ரன்னுக்கு 5 விக்கெட் என திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், கைல் வெர்ரைன் - மார்கோ ஜான்சென் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. அரை சதம் விளாசிய இருவரும் 6வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தனர். மிரட்டலாக விளையாடிய இவர்களை, கேமரான் கிரீன் தனது துல்லியமான வேகப் பந்துவீச்சில் வெளியேற்றினார். வெர்ரைன் 52 ரன் (99 பந்து, 3 பவுண்டரி), ஜான்சென் 59 ரன் (136 பந்து, 10 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்ப... அடுத்து வந்த ரபாடா (4 ரன்), மகராஜ் (2 ரன்), லுங்கி என்ஜிடி 2 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

தென் ஆப்ரிக்கா 68.4 ஓவரில் 189 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. அன்ரிச் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 64.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்திருந்த அந்த அணி, மேற்கொண்டு 10 ரன் மட்டுமே சேர்த்து 5 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆஸி. பந்துவீச்சில் கேமரான் கிரீன் 10.4 ஓவரில் 3 மெய்டன் உள்பட 27 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஸ்டார்க் 2, போலண்ட், லயன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்துள்ளது. கவாஜா 1 ரன் எடுத்து  ரபாடா வேகத்தில் விக்கெட் கீப்பர் வெர்ரைன் வசம் பிடிபட்டார். வார்னர் 32 ரன், லாபுஷேன் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

கேமரான் கிரீன்
ஓவர்    10.4
மெய்டன்    3
ரன்    27
விக்கெட்    5

Tags : South Africa ,Cameron Greene , South Africa bowled out for 189 runs: Great bowling by Cameron Greene
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...