×

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் மகாதீபம் ஏற்றிய மலைக்கு பிராயசித்த பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக, கடந்த 6ம்தேதி 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்த மகாதீபம், கடந்த 16ம் தேதி இரவுடன் நிறைவடைந்தது. தீபமலையில் மகாதீபத்தை தரிசிக்கவும், நெய் காணிக்கை செலுத்தவும், மலை மீது செல்ல 2,500 பக்தர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு கட்டுப்பாடுடன் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், மகாதீபம் ஏற்றும் திருப்பணியை செய்வோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் மலை மீது சென்றனர்.

அதேபோல், மலையில் மகாதீபம் காட்சியளித்த 11 நாட்களும் ஏராளமான பக்தர்கள் மலை மீது சென்று வழிபட்டனர். மகாதீபம் ஏற்றப்பட்ட அண்ணாமலை சுயம்பு வடிவான இறைவனின் திருமேனியாகும். எனவே, மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அக்னி பிழம்பாக சிவபெருமான் காட்சியளித்த இறைவுருவான மலை மீது, பக்தர்கள் செல்வது ஆன்மிக மரபு கிடையாது. எனவே, மகாதீபம் ஏற்றுவதற்காகவும், அதனை தரிசிப்பதற்காகவும் மலை மீது சென்றதற்கான பிராயசித்த வழிபாடு ஆண்டுதோறும் தீபத்திருவிழா முடிந்ததும் நடப்பது வழக்கம். அதன்படி, மலை மீது நேற்று புனிதநீர் தெளித்து பிராயசித்த வழிபாடு நடந்தது.

அப்போது, மலை உச்சியில் அமைந்துள்ள சுவாமி பாதத்தில் வழிபாடு நடத்தப்பட்டது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு காட்சிதரும் அண்ணாமலையார் பாதம் மற்றும் மகாதீப கொப்பரை வைக்கப்படும் இடம் ஆகியவற்றில் புனிதநீர் தெளித்து பிராயசித்த பூஜைகள் செய்யப்பட்டது.

Tags : Pooja ,Mahathipam ,Thiruvandamalai Dipadiruviva festival , Prayers offered to the mountain lit by the Mahadeepa during the Tiruvannamalai Deepatri Festival
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை