சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிவேகமாக சென்ற மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்ட 134 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, தொடர்ந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்வதையும், பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்கவும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதனடிப்படையில் தேனாம்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு, பைக் ரேஸில் ஈடுபட்ட 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தொடர்ந்து நள்ளிரவில் உயர் அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் 127 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும் பணி புத்தாண்டு முடியும் வரை தீவிரமாக நடைபெறும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மரணத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் (308 பிரிவு) உட்பட குற்றத்திற்கு தகுந்தார் போல், பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
பைக் ரேஸ் மற்றும் அதிக வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படுவதோடு மட்டுமின்றி ரூ. 5000 வரை அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு முடிகிற வரை கண்காணிப்பு பணிகள் தீவிரமாக இருக்கும் என்றும், ரேஸில் ஈடுபட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
