×

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முக கவசம் கட்டாயம்: சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முக கவசம் கட்டாயம் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு கொரோனா பெருந்தொற்று மீண்டும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய குடியரசு பகுதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், சுகாதாரத்துறை உயரதிகாரிகள் மற்றும் கொரோனா தொழில்நுட்ப அறிவுறுத்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்துள்ளது.

இதன் முடிவில், மாநிலத்தில் மூடிய பகுதிகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் உள் அரங்குகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முக கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது.

புது வருடத்திற்கான கொண்டாட்டங்களின்போது, பப்கள், உணவு விடுதிகள் மற்றும் பார்களில் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. புது வருட கொண்டாட்டங்கள் இரவு ஒரு மணியுடன் முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதேபோன்று, கர்நாடகாவில் விமான நிலையங்களில் வந்திறங்கும் சர்வதேச பயணிகளிடம் ரேண்டம் அடிப்படையில் 2 சதவீத பரிசோதனை செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. போதிய படுக்கைகள், ஆக்சிஜன் வினியோகத்துடன் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை திறக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து அடுத்த திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகள் வரும் வரை இந்த நடவடிக்கையானது தொடரும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Tags : Karnataka ,Health , Face shields mandatory in schools, colleges and theaters in Karnataka: Health Minister notification
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!