டெல்லி: ஜன 3-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில், ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய நடை பயணத்தை தொடங்கினார். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து யாத்திரை தற்போது டெல்லியை அடைந்திருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்னர் டெல்லியில் தொடங்கிய இந்த நடைபயணத்தில் திமுக எம்பி கனிமொழி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன், ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்றினர். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலம் என்பதால் அடுத்தகட்ட நடைபயணம் ஒருவாரம் ஓய்வுக்குப் பின்னர் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஜன 3-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உ.பி.சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ஜன.3 தொடங்கும் 448 கி.மீ துறை யாத்திரை உ.பி .பஞ்சாப் வழியாக காஷ்மீரில் ஜன.26-ல் குடியரசு தினத்தன்று நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
