ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்ட உள்ள நிலையில் எடப்பாடி அணியில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்துள்ளநிலையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி அணி கூட்டியுள்ளது. அதில் கூட்டணி குறித்து முக்கிய விவாதமும் நடத்தப்படுகிறது. அதிமுக அணி தற்போது 4 அணிகளாக பிரிந்து உள்ளது. அதில் எடப்பாடி அணியில்தான் நிர்வாகிகள் அதிகமாக உள்ளனர். ஆனாலும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கு பாஜக இப்போதே தயாராகி வருகிறது. தமிழகத்தில் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறது. தங்களுடைய விருப்பத்தை எடப்பாடியிடம் மோடியும், அமித்ஷாவும் தெரிவித்து விட்டனர்.

ஆனால் பாஜக தலைவர்களின் கோரிக்கையை எடப்பாடி ஏற்கவில்லை. இந்தநிலையில் எடப்பாடியை தங்கள் வழிக்கு கொண்டு வர, அவருக்கு வேண்டிய தொழில் அதிபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதோடு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. மேலும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சில உதவிகளை கேட்டதாகவும், ஒன்றிய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி பதவி ஏற்பு விழாவை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்தார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவருக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பளித்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி மேலும் அதிர்ச்சி அடைந்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் சென்னையில் தனது அணியின் மாவட்டச் செயலாளர் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் வார்த்தைகளாலும், ஒருமையிலும் பன்னீர்செல்வம் தாக்குதல் தொடுத்தார். மேலும், எம்ஜிஆரை தெரியுமா? பார்த்தது உண்டா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் கட்சி பணத்தை வீணாக செலவு செய்வதாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பாஜகவுடன் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவின் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியிருந்தார். பின்னர் சில நாட்களுக்கு முன்னர் பாஜக மீது மீண்டும் கடுமையான குற்றச்சாட்டுக்களை அவர் தெரிவித்தார். ஆனாலும் சண்முகத்தை எடப்பாடி பழனிச்சாமிதான் தூண்டி விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டுகள் அப்படியே இருந்தது. அதேநேரத்தில் சி.வி.சண்முகத்தை, பழனிச்சாமி அழைத்து சத்தம்போடவில்லை. இதுவும் விவாதப் பொருளாக மாறியது. இந்தநிலையில் எம்ஜிஆர் நினைவு நாள் பேரணியில் எடப்பாடியுடன் சி.வி.சண்முகம் கலந்து கொள்ளவில்லை., கூட்டத்தை புறக்கணித்தார்.

தனியாக சென்று அஞ்சலி செலுத்தினார். அதேநேரத்தில் அதிமுகவை ஒருங்கிணைக்கப்போவதாக சசிகலா கூறி வருகிறார். அவருக்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாஜக கூட்டணியில் தொடருவது குறித்து விவாதிக்க மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நாளை கூட்டியுள்ளார். காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி நிபந்தனை

எடப்பாடி பழனிச்சாமியிடம் கூட்டணி குறித்தும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் குறித்து ஆலோசனை நடத்த வந்த சில பாஜக மேலிட தலைவர்களிடம், முதலில் தமிழகத்தில் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள். சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரை போடுங்கள். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் குறித்து பேசக் கூடாது. அப்படி செய்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எடப்பாடி நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாஜகவில் தற்போது புயல் வீசுவதால் மாநிலத் தலைமை மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: