ஒடிசாவின் ரூர்கேலாவில் உலக கோப்பை ஹாக்கி தொடருக்காக பிரமாண்டமாக தயாராகும் மைதானம்: 1200 ஊழியர்கள் இரவு பகலாக பணி

புவனேஸ்வர்: ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் வரும்  13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொள்கின்றன. ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜனவரி 13ம் தேதி ஸ்பெயினுடன் மோதுகிறது. 2வது ஆட்டத்தில் 15ம் தேதி இங்கிலாந்துடனும் கடைசி லீக் ஆட்டத்தில் 19-ம் தேதி வேல்ஸ் அணியுடனும் இந்தியா மோதுகிறது.

உலக கோப்பை ஹாக்கி தொடருக்காக  பிரமாண்ட மைதானம் ரூர்கேலாவில் தயாராகி வருகிறது. இந்த மைதானம் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக் தொடங்கி வைத்தார். தற்போது பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 24 மணி நேரமும் இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர். 21ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் 16 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரமாண்டமாக ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.  

இந்த ஸ்டேடியத்தை அடுத்த மாதம் முதல்வர் திறந்துவைக்க உள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரும் பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் பெயரிடப்பட்ட புதிய மைதானத்தில் மொத்தம் 20 போட்டிகள் நடத்தப்படும். புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்திலும் உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: