×

தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் அங்கன்வாடிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்படவில்லை: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

நெல்லை: தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் அங்கன்வாடிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்படவில்லை எனவும், அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க.வினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள் எனவும் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகத்தில் அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் சத்தான உணவு வழங்க ஆலோசனை வழங்கப்பட்டு, அதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை, காது செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளது.

அவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாக உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதை தாய்மார்களே அறிந்திடாத நிலையில் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு தரமான ஊட்டச்சத்து மற்றும் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது. சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க.வினர் தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள்.

காலம் காலமாக, அழுகிய முட்டைகளை தண்ணீரில் போட்டு கண்டுபிடித்து அதனை திருப்பி அனுப்புவதற்காக தனியாக சேமித்து வைக்கப்படுகிறது. இந்த நடைமுறை 1996-ம் ஆண்டு முதலில் இருந்து வருகிறது. திருப்பி அனுப்ப வைக்கப்பட்டிருந்த முட்டைகளை போட்டோ எடுத்து பா.ஜ.க.வினர் அவதூறு பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு புரிதல் இல்லாமல் உள்ளது.

தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் அங்கன்வாடிகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்படவில்லை என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தமிழகத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,Minister ,Keita Jeeven , Anganwadis are not served rotten eggs at any place in Tamil Nadu: Minister Geetha Jeevan explains
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...