×

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: சுவாமிக்கு தங்க அங்கி அணிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நீளும் மண்டல காலம் நவ. 17ம் தேதி தொடங்கியது. கடந்த இரு வருடங்களாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் இவ்வருடம் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. கடந்த மாதம் சராசரியாக தினமும் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர்.

இம்மாதம் மேலும் அதிகரித்து தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பக்தர்கள் வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை( 27ம் தேதி) நடக்கிறது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை திருவிதாங்கூர் மன்னர் சபரிமலை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் இந்த தங்க அங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம், கடந்த 23ம் தேதி காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.

ஓமல்லூர், ரான்னி, பெருநாடு வழியாக இன்று மதியம் இந்த ஊர்வலம் பம்பையை அடைந்தது. பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த தங்க அங்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.25 மணி அளவில் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தங்க அங்கியுடன் காட்சியளிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் குவிவார்கள். இதையடுத்து சபரிமலையில் நாளை மதியம் 12.30- 1.00மணிக்கு இடையே சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜையை காண திரளான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Tags : Mandal Pooja ,Sabarimala ,Swami , Mandal Pooja tomorrow at Sabarimala: Swami will be donned with golden robe
× RELATED மண்டல பூஜை விழா