அபராதம் விதித்ததால் ஆத்திரம்; போலீஸ்காரர் பைக்கை எரித்த வாலிபர்: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: குடிபோதையில் ஓட்டி வந்த பைக்கை போலீசார் பறிமுதல் செய்து அபராதம் ரூ.10 ஆயிரம் கட்ட சொன்னதால் ஆத்திரமடைந்த வாலிபர், பழிக்குப் பழியாக போலீசாரின் பைக்குக்கு தீ வைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இரவில் போக்குவரத்து போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த சாம்பவலசை சேர்ந்த தமிழ்செல்வன்(31) என்பவரது பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் புதிய மோட்டார் வாகன சட்டப்படி பைக்கிற்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் கட்டிவிட்டு பைக்கை எடுத்து செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.

குடிபோதையில் தனது பைக் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட முடியாததால் ஆத்திரத்தில் இருந்த தமிழ்செல்வன், நேற்று இரவு காங்கயம் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் காவல் நிலையம் முன்பாக நிறுத்தியிருந்த போலீஸ்காரர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பைக்கிற்கு பழிக்குப் பழியாக தீ வைத்ததாக கூறப்படுகிறது. பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததை பார்த்த அக்கம் பக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே பைக் தீயில் எரிந்து சாம்பலானது.

இதுதொடர்பாக போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், தமிழ் செல்வன் என்பவர் பைக்கிற்கு தீ வைத்தது தெரிய வந்தது. இவரது பைக், கடந்த வாரம், குடிபோதையில் ஓட்டி வந்ததற்காக பறிமுதல் செய்யப்பட்டதும், பைக்கை அபராதம் கட்டி திரும்ப எடுக்க முடியாத காரணத்தால் ஆத்திரத்தில் தீ வைத்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர்.

Related Stories: