சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: தமிழக கடலோர கிராமங்களில் கண்ணீர் அஞ்சலி

சென்னை: சுனாமி 18ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழக கடலோர பகுதிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடலில் பால் ஊற்றியும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக ஏற்பட்ட சுனாமி பேரலை நாகை மாவட்டத்தில் ஆறாத வடுவை உண்டாக்கியது. இந்த தினம் கருப்பு ஞாயிறு நாளாக வரலாற்றில் பதிந்து விட்டது. டிசம்பர் 26ம் தேதி ஆழி பேரலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,065 ஆகும். பெற்றோரை இழந்து 243 பேர் ஆதரவின்றி நின்றனர். தாய் அல்லது தந்தை என இருவரில் ஒருவரை மட்டும் 1,329 பேர் இழந்தனர். வெளிமாவட்டங்களை சேர்ந்த 536 பேர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 240 பேர் என மொத்தம் 6,065 பேர் பலியாயினர்.

இப்படி பேரழிவை ஏற்படுத்தி ஆறாத வடுவான சுனாமி 18ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நாகை நம்பியார் நகரில் சுனாமி நினைவு தின பேரணி ஏழைப்பிள்ளையார் கோயில் தெருவில் இருந்து இன்று காலை புறப்பட்டது. இதில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்று சமுதாய கூடம் அருகே உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்துபுறப்பட்டு நம்பியார் நகர் கடற்கரை சென்று சுனாமியால் உயிரிழந்தவர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தினர். அப்போது ஏராளமான பெண்கள் கடற்கரையில் அமர்ந்து கண்ணீர் மல்க ஒப்பாரி வைத்தனர்.

இதேபோல் வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து அமைதி பேரணி துவங்கி சுனாமியின்போது உயிரிழந்த 1,000 பேரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அங்கு மும்மதத்தினரின் கூட்டு பிரார்த்தனை நடந்தது. பின்னர் சுனாமியால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். ஒரு சிலர் தங்களது உறவினர்களுக்கு பிடித்த இனிப்பு, உணவு பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர். அதேபோல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமியால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தங்கி பயிலும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

நாகை மாவட்டத்தில் மட்டும் 25 இடங்களில் சுனாமி நினைவு தின அமைதி பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் சுனாமி 18ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கடலில் பால் ஊற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை மீன் விற்பனை நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை பொதுமக்கள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடந்தது.பூம்புகாரில் சுனாமியின்போது உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மீனவர்கள், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காரைக்கால்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்களில் சுனாமியால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். புதுவை அரசு சார்பில் உயிரிழந்தோர் நினைவாக காரைக்கால் கடற்கரை பகுதியில் சுனாமி நினைவுத்தூண் எழுப்பப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சுனாமி நினைவு தூணில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மவுன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

குமரி

குமரி மாவட்டத்தில் மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் பகுதிகளில் சுனாமி தாக்கி நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதையொட்டி கடற்கரை கிராமங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன. நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடியில் 119 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் இன்று காலை மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். குளச்சல் அருகே உள்ள ெகாட்டில்பாடு கிராமத்தில் சுனாமியில் உயிரிழந்த 199 பேரின் நினைவாக சுனாமி காலனியில் இருந்து கொட்டில்பாடு வரை மவுன ஊர்வலம் சென்றனர். அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை நடைப்பெற்றது. தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி

சுனாமி தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாயினர். சுனாமியின் 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி, திரேஸ்புரம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள், பொதுமக்கள், சுனாமியால் உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் பலியானார்கள். சுனாமி நினைவு தினத்தையொட்டி கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு சுனாமியில் பலியானவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக அதன் தலைவர் சுப்பராயன் தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். சுனாமி 18வது நினைவு தினத்தையொட்டி இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Related Stories: