×

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளால் அழகாகும் கிராமங்கள்

*தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிப்பு

*நீர்நிலைகளில் புனரமைப்பு பணிகள் தீவிரம்

சிவகாசி : சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் படுஜரூராக நடைபெற்று வருகின்றன. பல்வேறு கிராமங்களில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவு திட்டங்களான அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தமிழகத்தில் மீண்டும் புத்துயிர் பெற்று பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில், 2006-2011ம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவங்கப்பட்டது. 2011 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால், இத்திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். அதனையொட்டி, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் துவக்கிய அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம் 2021-26ம் ஆண்டு வரை, கிராமங்களை முழுமையான வளர்ச்சி அடைந்த கிராமங்களாக மாற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக ஏற்படுத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக 2021-22ம் ஆண்டில் நிதி ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழகம் முழுவதிலும் 2 ஆயிரத்து 505 கிராம ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 12 ஊராட்சிகளில் செயல்படுத்த 7 கோடியே 2 லட்சத்து 41 ஆயிரத்து 805 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகள் விரைவில் தொடங்கப்படவும் உள்ளது.

இது குறித்து ஊராட்சி ஒன்றியத்தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ் கூறுகையில், ‘சிவகாசி ஒன்றியத்தில் கிராமங்களில் வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகள் நிறைவேற்றும் வகைளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் நீர்நிலைகளை பராமரித்தல், அங்கன்வாடி கட்டிடங்கள், ரேஷன் கடை கட்டிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டுதல், தெருக்களுக்கு காங்கிரீட் சாலை மற்றும் வண்ணக்கற்கள் சாலை அமைத்தல் தெருவிளக்குகள், இடுகாடு, சுடுகாடு, குடிநீர்,
விளையாட்டு, நூலகங்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகள் நடைபெற உள்ளது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்த வரையில் இத்திட்டத்தின்கீழ், பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், சில பணிகள் நடைபெற்று வருகின்றன.

 சில பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. எங்கள் கந்தக பூமியில் கலைஞரின் கனவு திட்டம் மூலம் எங்களது கிராம சாலைகள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இதற்காக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசுவிக்கும் கிராம மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சித்துராஜபுரம் ஊராட்சி தலைவர் லீலாவதிசுப்புராஜ் கூறுகையில், ‘தற்போது உள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு அவற்றின் வழிகாட்டி நெறிமுறைகள் எளிமையானதாக இருக்கவும், உள்ளாட்சி நிறுவனங்கள் தங்களின் விருப்ப பணிகளை எடுத்துச் செய்யும் வகையிலும், கிராம வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படும் மத்திய அரசு திட்டங்களின் கீழ் எடுத்துச் செல்ல இயலாத அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இந்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உள்ளது.’

 இதிட்டத்தின் கீழ் எங்கள் கிராமத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நீர்நிலையை பாதுகாக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் புதுக்குளம் கண்மாய் ரூ.24 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டதன் மூலம் 5 கிராமங்களில் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்ய முடிகிறது. தமிழக முதல்வரின் இதுபோன்ற பல்வேறு திட்டப்பணிகள் மூலம் கிராமங்கள் நகரங்களுக்கு இணையாக வளர்ந்து வருகின்றது’ என்று கூறினார்.

ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு...

சொக்கம்பட்டி ஊராட்சிக்கு ரூ.32 லட்சத்து 86 ஆயிரம், ஜமீன்சல்வார்பட்டி ஊராட்சிக்கு ரூ.33 லட்சத்து 47 ஆயிரம், சித்தமநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு ரூ.33 லட்சத்து 47ஆயிரம், ஏ.துலுக்கப்பட்டி ஊராட்சிக்கு ரூ.33 லட்சத்து 6 ஆயிரம், குமிழங்குளம் ஊராட்சிக்கு ரூ.32 லட்சத்து 85 ஆயிரம், கொத்தனேரி ஊராட்சிக்கு ரூ.32 லட்சம், ஆனையூர் ஊராட்சிக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 42 ஆயிரம், நெடுங்குளம் ஊராட்சிக்கு ரூ.43 லட்சம், பள்ளப்பட்டி ஊராட்சிக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 98 ஆயிரம், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு ரூ.72 லட்சம், சித்துராஜபுரம் ஊராட்சிக்கு ரூ.82 லட்சம், விஸ்வநத்தம் ஊராட்சிக்கு ரூ.94 லட்சம் என மொத்தம் 12 ஊராட்சிக்கு ரூ.7 கோடியே 2 லட்சத்து 41 ஆயிரத்து 805 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.



Tags : Sivakasi ,Panchayat Union , Sivakasi: In Sivakasi Panchayat Union, Rs 7 crore has been allocated for Anna Revival Project and the work is progressing smoothly.
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு