×

வத்தலக்குண்டு பேரூராட்சியில் குப்பை மேலாண்மை மூலம் கொட்டும் வருமானம்-காய்கறி தோட்டம், மண்புழு உரம் தயாரிப்பு, மாடு வளர்த்து அசத்தல்

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பேரூராட்சியில் குப்பை மேலாண்மை மூலம் வருமானம் கொட்டும் தொழில்களை உருவாக்கியுள்ளனர். காய்கறி தோட்டம் அமைத்து காய்கறி விற்கின்றனர். மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர். காய்கறி கழிவுகள் மூலம் மாடுகளை வளர்த்து அசத்துகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில், 18 வார்டுகளையும் திமுக கைப்பற்றி, சிதம்பரம் என்பவர் தலைவராக உள்ளார்.

இந்த பேரூராட்சி குப்பை மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது. குப்பை மூலம் வருவாய் ஈட்டும் தொழில்களை செய்து வருகின்றனர். தினசரி தூய்மைப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று விசில் அடித்து குப்பையை சேகரம் செய்கின்றனர். இவ்வாறு சேகரமாகும் குப்பைகளை, உசிலம்பட்டி பிரிவு என்னும் இடத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் சேமிக்கின்றனர். அங்கு குப்பைகள் மழை போல் குவிந்து கிடந்தாலும், துர்நாற்றம் இல்லாமல், குப்பைக் கிடங்கை, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தூய்மையாக வைத்துள்ளனர்.

குப்பைகள் தரம் பிரிப்பு:

குப்பைக் கிடங்கில் குப்பை குவிக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான கொக்குகளும், புறாக்களும் பறந்து வந்து அதில் உள்ள புழு, பூச்சிகளை உண்கின்றன. அதைத் தொடர்ந்து மேற்பார்வையாளர் தலைமையில் 10 பெண்கள் குப்பைகளை தரம் பிரிக்கப்படுகின்றனர். முதற்கட்டமாக காய்கறி கழிவுகள் பிரிக்கப்பட்டு அங்குள்ள மாடுகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. பின்னர் குப்பையில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி ஜாடிகள், உடைந்த பீங்கான்கள், பழைய காலணிகள், பேக்குகள் உள்பட பல்வேறு பொருட்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு, தனித்தனி இடங்களில் குவிக்கப்படுகின்றன. இந்த பொருட்கள் அனைத்தும் வியாபாரிகளிடம் விற்கப்படுகிறது. அதன்பிறகு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.

மக்கும் குப்பைகள் விவசாயிகளுக்கு ஒரு டன் ரூ.500க்கு விற்கப்படுகிறது. விவசாயிகள் நேரில் வந்து பணம் கட்டி மக்கும் குப்பையை வாங்கிச் செல்கின்றனர். வாழை, நெல் சாகுபடிகளுக்கு உரமாக போடப்படுகிறது. ரசாயன உரங்களை காட்டிலும், இயற்கை உரத்திற்கு அதிக பலன் கிடைப்பதால், விவசாயிகள் போட்டி போட்டு மக்கும் குப்பையை வாங்கிச் செல்கின்றனர்.

காய்கறி கழிகளால் மாடுகள் வளர்ப்பு:

முதன்முதலில் காய்கறி கழிவுகள் மூலம் வளர்ப்பதற்காக ஒரு மாடு வாங்கப்பட்டது. இன்று அது நான்கு மாடுகளாக பெருகி உள்ளது. மேலும், மக்கும் குப்பையை ஒரு தொட்டியில் போட்டு, மண்புழுக்களை அதே தொட்டியில் போட்டு மண்புழு உரமும் தயாரிக்கின்றனர். மண்புழு உரம் ஒரு கிலோ ரூ.5 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விற்கப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல், அருகிலேயே ஒரு காய்கறி தோட்டம் அமைத்துள்ளனர்.

தக்காளி, மிளகாய், கத்திரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறி வகைகளை பயிரிட்டுள்ளனர், மக்கும் குப்பை, மண்புழு உரம் அதிகம் போடப்படுவதால் அங்கு விளையும் காய்கறிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். தேங்காய் சிரட்டை, வாட்டர் பாட்டில், பால் பாக்கெட் போன்றவை மறுசுழற்சிக்காக வாங்கப்படுகிறது. திண்டுக்கல், கரூர், சேலம் ஆகிய நகரங்களில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

கால் மிதியடி தயாரிப்பு:

துணிக் கழிவுகள் தனியே பிரிக்கப்பட்டு ஒரு அறையில் குவிக்கப்படுகிறது. பின்னர் அதன் மூலம் வீட்டுக்கு பயன்படுத்தும் கால் மிதியடிகளை பெண்கள் தயாரிக்கின்றனர். கால் மிதியடி கட்டுக்கட்டாக கட்டப்பட்டு பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் இருந்து வரும் மொத்த ஜவுளி வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது. வேண்டாம் என்று தூக்கி எறியப்படும் குப்பை வருமானத்தைக் குவிக்கும் கோபுரமாக மாறி உள்ளது.

இந்த குப்பை கிடங்கின் மூலம் நேரடியாக 10 பேரும், மறைமுகமாக நூற்றுக்கணக்கானோரும் பயனடைந்து வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான புறாக்கள், கொக்குகளுக்கு குப்பை கிடங்கு உணவு கூடமாக உள்ளது. வத்தலக்குண்டு பேரூராட்சி குப்பை மேலாண்மை மூலம் காய்கறிப் பூங்கா, மாட்டுப் பண்ணை, கால் மிதியடி தயாரிக்கும் மினி தொழிற்சாலை என்று தனி முத்திரை பதித்து வருகிறது. அதிலும் காய்கறி பூங்கா அருகில் உள்ள மினி பூந்தோட்டம் எங்கும் இல்லா தனி சிறப்பாகும். குப்பை குடோன் என்றால் துர்நாற்றம் அடிக்கும் என்று கருதுபவர்கள் கருத்துக்கு மாற்றாக இங்கு பூ வாசம் வீசுகிறது. வத்தலக்குண்டு பேரூராட்சி குப்பை கிடங்கின் தனி சிறப்புகளை கண்ட சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி செயலை விசில் அடித்து பாராட்டுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் செல்வராஜ் கூறுகையில், ‘நான் ஒரு முறை வத்தலக்குண்டு பேரூராட்சி குப்பை கிடங்குக்கு சென்றிருந்தேன். சுத்தமாக இருந்தது; துர்நாற்றமும் இல்லை. மாறாக பூக்களின் வாசமே இருந்தது. பல குப்பை கிடங்குகளை பார்த்திருக்கிறேன். இதுபோல சுத்தமாக பணம் குவிக்கும் தொழிற்சாலையாக எதுவும் இருந்ததில்லை என்றார்.

Tags : Vatthalakundu: Vattalakundu municipality has created income generating industries through waste management. Vegetable garden
× RELATED மேட்டுப்பாளையத்தில் இன்று காலை...