×

முன்னெச்சரிக்கை நடவடிக்கை; சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் 600 பேருக்கு புதிய கொரோனா பரிசோதனை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 3 நாட்களில் 600 பேருக்கு புதிய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. இதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம் சர்வதேச முனையம் வருகைப் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை தமிழக சுகாதாரத்துறை தொடங்கி உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை நடக்கிறது. இந்த நாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் பயணிகள் மாறி வருவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 2 சதவீதம் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 600 பயணிகளுக்கு புதிய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

விமானங்களில் வரும் போது, இருமல், சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் இருக்கும் பயணிகளை 2 சதவீத பரிசோதனைக்கு உட்பட்ட பயணிகளாக, தேர்வு செய்கின்றனர். குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு, இந்த பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன. இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். 12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது. ஆனால் அவர்களில் யாருக்காவது, இருமல், சளித்தொல்லை போன்றவைகள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பரிசோதனைக்கு உட்படும் பயணிகள் சிறிது நேரத்தில் தங்களுடைய பரிசோதனை முடிவுகளை வாங்கிவிட்டு செல்லலாம். அந்தப் பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதோடு அந்தப் பயணிகள் மருத்துவமனைகள் அல்லது அவர்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai airport , precautionary measures; 600 new corona tests at Chennai airport in last 3 days
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு...