விடுமுறை தினமான நேற்று ஏலகிரி பறவைகள் சரணாலயத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்

ஏலகிரி : கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை தினத்தில் ஏலகிரி மலை பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஏலகிரி மலையானது ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே பொன்னேரி அடுத்து  சுமார் 1410.60 மீட்டர் உயரத்தில் 4 மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில்  அமைந்துள்ளது. 14 கிராமங்களையும் உள்ளடக்கிய ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பாட்டு வருகிறது.

இது சுற்றுலா தலமாக விளங்குவதால் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். ஏலகிரி மலையில் முக்கிய சுற்றுலா தலங்களான படகு  இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, பறவைகள் சரணாலயம், மூலிகை பண்ணை, செல்பி பார்க், சாகச விளையாட்டுகள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கும் இடமாக உள்ளது.  மேலும், பறவைகள் சரணாலயத்தில் அதிக சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடும், குழந்தைகளுடனும், கண்டுகளித்து செல்கின்றனர். இந்த பறவைகள் சரணாலயத்தில் அமெரிக்கன் பறவைகள், ஆப்பிரிக்கா லவ் பர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் உள்ளன.

அம்பரல்லா என்ற பறவை ‘ஹாய் சாப்பிட்டியா’ என்று கூறினால் பதிலுக்கு ஹாய் சாப்பிட்டியா என்று பதிலுக்கு பேசும் திறன் உடையது. காட்டோ என்ற பறவை விசில் அடித்தால் திரும்பவும் விசில் அடிக்க கூடியது. இதனால், சுற்றுலா பயணிகள் அவ்விடத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். பொக்கோ என்ற பறவை மனிதர்களிடம் இயல்பாக பழக்கம் உடையது.

மேலும், பல வகையான நாய்கள் உள்ள நிலையில் சைபிரேனேசி என்ற நாய் சுற்றுலா பயணிகளிடம் இயல்பாக பழகி வருகிறது. இங்கு நெருப்புக்கோழி பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது கோழியின் சிறப்பு குதிரையை அடுத்து வேகமாக ஓடக்கூடிய திறன் கொண்டவை ஆகும். இங்குள்ள பிஸ் ஸ்பா என்ற மீன் தொட்டியில் சுற்றுலா பயணிகளும், குழந்தைகளும் கால்களை வைத்தால் பாதங்களை செல்லமாக கடிப்பது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.

மேலும், இங்கு மிக்சிகன் வகையான பாம்பு வகைகள் உள்ளன. இந்த பாம்புகளை கையில் பிடித்து சுற்றுலா பயணிகள் விளையாடி வருகின்றனர். மார்மோசெட் என்ற குரங்கு உலகத்திலே சிறிய வகை குரங்கு, இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.பேபி, வெளிநாட்டு ஓணான்கள், பேயர்டேட் ட்ராகன் உள்ளிட்டவை இந்த பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் பிடித்து விளையாடுவதற்காக வைக்கப்பட்டுள்ளன. 7டி  சினிமா மற்றும் நெட் கிரிக்கெட் மக்கள் அதிகமாக விரும்புகின்றனர்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும்  அரையாண்டு விடுமுறையையொட்டி நேற்று ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.  அமெரிக்கன் பாம்பு, பறவைகள், முயல்கள் உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர். இங்கு குறைந்த கட்டணத்தில் அனைத்தையும் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் கண்டுகளித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.

Related Stories: