×

நாகர்கோவில் அருகே 4 வழிச்சாலையில் கொட்டப்படும் செப்டிக் டேங்க் கழிவுகள்- கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே நான்கு வழிச்சாலை கொட்டப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளால் பெரும் நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலையில் பணிகள் இன்னும் முழுமை அடையாமல் உள்ளதால், முழு அளவில் போக்குவரத்து தொடங்க வில்லை. தற்போது காவல்கிணறு முதல் கன்னியகுமரி வரையிலான நான்கு வழிச்சாலையிலும், காவல்கிணறு முதல் நாகர்கோவில் அப்டா  மார்க்கெட் வரையிலான நான்கு வழிச்சாலையிலும் போக்குவரத்து நடக்கிறது.

மற்ற பகுதிகளில் பணிகள் அரைகுறையான நிலையில் உள்ளன. குறிப்பாக கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் செல்லும் நான்கு வழிச்சாலை பணிகள் பாதியில் நிற்கின்றன. இதில் புதுக்கிராமம், தேரேகால்புதூர் பகுதிகளில் இன்னும் சிறு, சிறு பாலங்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது.

இந்த நிலையில் தேரேகால்புதூர் பகுதியில் நான்கு வழிச்சாலைக்கு கீழ், இணைப்பு சாலைகள் உள்ளன. இந்த இணைப்பு சாலை பகுதியில் கழிவு நீர் ஊர்தி வாகனங்கள் அதிகளவில் நிற்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரத்தில் நின்றாலும் கூட, இவற்றில் சில வாகனங்களில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகள், சாலை வடிகால்களில் திறந்து விடப்படுகின்றன. இதனால் அந்த பகுதியை கடக்கும் போதே துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியில் வயல் வெளிகளும் உள்ளன. மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டான அப்டா மார்க்கெட் அமைந்துள்ளது.

இவர்கள் திறந்த வெளியில் செப்டிக் டேங்க் கழிவுகளை திறந்து விடுவது பேராபத்து என்று சமூக ஆர்வலர்கள் புகார் கூறி உள்ளனர். நீர் நிலைகள், வயல் வெளிகளையொட்டி செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டக் கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி, ஒரு சில வாகன பணியாளர்கள் இது போன்று செப்டிக் டேங்க் கழிவுகளை சாலை ஓர பகுதிகளில் கொட்டி வருவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனவே நாகர்கோவில் மாநகர பகுதிகளில் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்ட கூடாது என்று மேயர் எச்சரித்த பின்னரே நகர பகுதியில் இருந்து புறநகர் பகுதிக்கு கழிவு நீர் ஊர்தி வாகனங்கள் மாற்றப்பட்டன. இந்த நிலையில் நான்கு வழிச்சாலையையொட்டி திறந்து விடப்பட்டு வரும் செப்டிக் டேங்க் கழிவுகள் நகர மக்களுக்கும் பெரும் தலைவலியாக மாறும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

Tags : Nagercoil , Nagercoil: There is a complaint that there is a great risk of infection due to the septic tank waste that is being dumped near Nagercoil.
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...