×

இருக்கன்குடி கல்வெட்டில் புதுத்தகவல் கிராம மக்களுக்கு வரிவிலக்கு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்பிகே கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில், வரலாற்று ஆய்வாளர்கள் ராஜபாண்டி, சரத்ராம், காசிராஜன், பழனி குமார் ஆகியோர் இருக்கன்குடி அருகே, கைலாசபுரத்தில் கள ஆய்வு செய்தபோது, அங்கு தனியார் நிலத்தில் ஒரு கல்வெட்டை கண்டறிந்தனர். கல்வெட்டை ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குனர் சாந்தலிங்கம் உதவியோடு படித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கல்வெட்டு 4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உள்ளது. அதில், 29 வரிகள் காணப்படுகின்றன. அதில் விசுவாசு வருடம் கிபி 1666ம் ஆண்டு பங்குனி மாதம் 25ம் தேதி சொக்கநாத நாயக்கர் மட்டும் வடமலையப்பன் புண்ணியமாக கைலாசநாத சுவாமிக்கு நிலக்கொடையாக (திருவிடையாட்டம்) வழங்கியுள்ளார். நிலக்கொடையாக கொடுத்த நிலமானது கைலாசநாதநல்லூர் என்று அழைக்கப்பட்டதாகவும், இவ்வூரில் குடியேறிய மக்கள் எவ்வித வரியும் செலுத்த வேண்டாம் என்றும் ஊர்சபை கூடி முடிவு எடுத்ததாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

சில இடங்களில் உள்ள எழுத்துக்கள் தேய்ந்துள்ளதால், அதன் உண்மை பொருளை அறிய முடியவில்லை. நாயக்க மன்னர் காலத்தில், கைலாசநாத நல்லூர் என அழைக்கப்பட்ட இவ்வூர், தற்போது மருவி கைலாசபுரம் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சொக்கநாத நாயக்கர் (கி.பி. 1659 - 86) மதுரையை ஆண்ட ஒன்பதாவது நாயக்க மன்னர் ஆவார். இவரது மனைவி ராணி மங்கம்மாள். இம்மன்னருடைய கல்வெட்டுகள் திருச்சுழி, என்.மேட்டுப்பட்டி, நென்மேனி ஆகிய ஊர்களிலும் காணப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Aruppukkottai: Aruppukkottai SPK College History Department headed by Professor Vijayaraghavan, Historians Rajapandi,
× RELATED தமிழ்நாட்டில் நாளை 7 மாவட்டங்களில்...