தொடர் விடுமுறை எதிரொலி!: சென்னையில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 49 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம்..போக்குவரத்துத்துறை அதிரடி..!!

சென்னை: சென்னையில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தனர். விடுமுறை முடிந்து ஜனவரி 11ம் தேதி சென்னை திரும்புவதற்கான பேருந்து கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்ந்தது. மதுரையில் இருந்து சென்னை திரும்புவதற்கு ரூ.700 முதல் ரூ.1000 என்ற வழக்கமான கட்டணம் ஜனவரி 1ல் ரூ.2900 வரை உயர்ந்தது.

இதேபோல் கோவையில் இருந்து சென்னை திரும்புவதற்கு சுமார் ரூ.1,00 என்ற வழக்கமான கட்டணம் ஜனவரி 1ம் தேதி ரூ.3,000 என உயர்த்தப்பட்டது. ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப முன்பதிவு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அதிக கட்டணம் வசூலித்த 49 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.92,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு, போரூர் பகுதிகளில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி 49 ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து 49 பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். புகாரளித்த 8 பயணிகளுக்கு ஆம்னி பேரூந்துகளிடம் இருந்து  ரூ.9,200 வசூலித்து அவர்களுக்கே திரும்பத் தரப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து கடந்த 23ம் தேதி தொடங்கிய சோதனை வரும் 2ம் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: